தானியங்கள் ஏற்றுமதிக்கு உக்ரைன் முன்னெடுத்த அவசர முடிவு: பாராட்டும் உலக நாடுகள்
கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் முரட்டுத்தனத்தை முறியடிக்கும் வகையில், கைவிடப்பட்ட நிலையில் இருந்த பழைய துறைமுகங்களை உக்ரைன் தானிய ஏற்றுமதிக்காக பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் இந்த சமயோசித முடிவு உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளதுடன், ஏழை நாடுகளின் பசியாறும் எனவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கருங்கடல் பகுதியில் ரஷ்யா பிடிவாதம் காட்டி வருகிறது. உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை அனுமதிக்க நிபந்தனைகளும் விதித்து வருகிறது.
உக்ரைன் தானியங்கள் தொடர்பில் துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளுக்கு இதுவரை இறுதியான முடிவு எட்டாத நிலையில், உக்ரைன் அவசர முடிவு என டானூப் ஆற்றில் அமைந்துள்ள பழைய துறைமுகத்தை பராமரிக்கவும் அங்கிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது.
போருக்கு முன்பு, டானூபில் உள்ள உக்ரேனிய நதி துறைமுகங்கள் அரிதாகவே பயன்படுத்தப்பட்டன, அவற்றில் சில முற்றிலும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் முரட்டுத்தனத்தைத் தொடர்ந்து,
கடல் முற்றுகையைத் தவிர்ப்பதற்காகவும், நாட்டின் கோதுமை ஏற்றுமதியை விரைவுபடுத்துவதற்காகவும் உக்ரைன் நிர்வாகம் அதன் பழைய நதி துறைமுகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.
குறித்த துறைமுகமானது சோவியத் ஒன்றிய காலகட்டத்தில் டானூப் பிராந்தியத்தில் மிக முக்கியமான ஒன்றாகும் மற்றும் ருமேனியாவிற்கு செல்லும் பாதையாகவும் இருந்து வந்துள்ளது.
சமீபத்தில் இந்த துறைமுகமானது பயன்படுத்தப்படவில்லை. எனவே, கொள்ளளவை அதிகரிக்கவும் மற்ற நதி துறைமுகங்களுக்கு இணையாக இதை விரிவுபடுத்தவும் தற்போது பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், கருங்கடலில் சுலினா கால்வாயில் நுழைவதற்கு 160 க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருக்கின்றன, ஆனால் அந்த கால்வாயின் கொள்ளளவு ஒரு நாளைக்கு 5-6 கப்பல்கள் மட்டுமே எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போருக்கு முன்னர் சுமார் ஐந்து அல்லது ஆறு கப்பல்கள் ஒடேசா துறைமுகத்தில் இருந்து மொத்தம் 100,000 டன் தானியங்களை வெளியேற்றியுள்ளன, ஒரு கப்பல் 50,000 டன்கள் வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது எனவும் தெரிவித்துள்ளனர்.