தீர்ந்து வரும் வெடிமருந்துகள்...உக்ரைனில் வேகமாய் முன்னேறும் ரஷ்ய படைகள்: அதிகரிக்கும் பதற்றம்!
ரஷ்யாவை எதிர்த்து போராடுவதற்கு உக்ரைனிடம் வெடிமருந்துகள் தீர்ந்து வருவதாக மைகோலேவ் பகுதியின் கவர்னர் விட்டலி கிம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்யாவின் தனது தாக்குதலை முன்னகர்த்தி வருகிறது.
மேலும் உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகள் இடையிலான போர் தாக்குதலானது தற்போது செவரோடோனெட்ஸ்க் (Severodonetsk) பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் இருக்கும் முன்னணி நகரமான மைகோலாய்வில் (Mykolaiv) இருநாடுகளுக்கு இடையிலான சண்டையானது பீரங்களின் போராக மாறிவிட்டது என அந்தப்பகுதியின் கவர்னர் விட்டலி கிம் தெரிவித்தார்.
அத்துடன் ரஷ்ய படைகள் மிகவும் வலிமையாக இருப்பதாகவும், ஆனால் தற்போது உக்ரைனிடம் அவர்களை எதிர்த்து போராட தேவையான வெடிமருந்துகள் கணிசமாக தீர்ந்து வருவதாகவும் கூறினார் என AFP செய்தி நிறுவன அறிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும் நீண்ட தூரம் தாக்ககூடிய ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளின் வழங்கலை மேற்கத்திய நாடுகள் துரிதப்படுத்த வேண்டும், அப்போது தான் ரஷ்யாவிற்கான பதிலடியை உக்ரைனால் விரைவாக வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவி மிக மிக முக்கியம் என விட்டலி கிம் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: நாட்டை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்...ஆப்கானியர்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!
இதே போன்ற கருத்தை உக்ரைனின் இராணுவ உளவுத்துறையின் துணைத் தலைவர் வாடிம் ஸ்கிபிட்ஸ்கியும் பிரித்தானியாவின் கார்டியன் பத்திரிக்கைக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின் போது தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.