மீண்டும் உக்ரைன் - ரஷ்ய தானிய ஏற்றுமதி... உறுதி செய்யப்பட்ட புதிய ஒப்பந்தம்
சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே 12 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், உக்ரைனும் ரஷ்யாவும் கருங்கடல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பெரிய முன்னெடுப்பாக
இதனால், இரு நாடுகளும் இனி தானிய ஏற்றுமதிக்கு தயாராகும் என்றே நம்பப்படுகிறது. பேச்சுவார்த்தை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் இருந்து இதுவரை அறிக்கை ஏதும் வெளிவராத நிலையில்,
அமைதியை நோக்கிய முதல் பெரிய முன்னெடுப்பாக, உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் கடற்படை போர் நிறுத்தத்திற்கு தனித்தனியாக ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் Rustem Umerov தெரிவிக்கையில், பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்தல், படைபலத்தைப் பயன்படுத்துவதை நீக்குதல் மற்றும் கருங்கடலில் இராணுவ நோக்கங்களுக்காக வணிகக் கப்பல்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது என உக்ரைன் தரப்பில் ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கருங்கடலின் கிழக்குப் பகுதிக்கு வெளியே ரஷ்ய இராணுவக் கப்பல்களின் எந்தவொரு நகர்வும் ஒப்பந்தத்தை மீறுவதாகக் கருதப்படும் என்று Rustem Umerov ஜனாதிபதி புடினை எச்சரித்துள்ளார்.
தானிய ஏற்றுமதி
அப்படியான ஒரு நகர்வுக்கு ரஷ்யா தயாராகும் என்றால், இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு தற்காப்பு உரிமையைப் பயன்படுத்த முழு உரிமையும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பான மேலதிக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால், இனி எந்த அச்சுறுத்தலும் இன்றி தானிய ஏற்றுமதி முன்னெடுக்கப்படலாம் என்றே தகவல் கசிந்துள்ளது.
வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து தெரிவிக்கையில், மின்சார உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தடைசெய்யும் நடவடிக்கைகளுக்கு உதவ உக்ரைனும் ரஷ்யாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தையில், இந்த கருங்கடல் போர் நிறுத்தம் தொடர்பில் விரிவாக விவாதிக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |