அனைத்தையும் அழித்துவிட்டோம்! நவீன ஏவுகணைகளை கொண்டு வானவேடிக்கை காட்டிய ரஷ்யா
உக்ரைனின் ஆயுத கிடங்கை நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக முயற்சித்தது.
ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் ரஷ்ய படைகளின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதை தொடர்ந்து அந்நாட்டு படையினர் தங்கள் கவனத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியம் மீது திருப்பினர்.
முந்தைய தவறான செயல்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ரஷ்ய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதில் துல்லியமான தாக்குதல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள உக்ரைனின் ஆயுத கிடங்கை நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த கிடங்கில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் இருந்ததாகவும், அவை அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அதே சமயம் இதனை உக்ரைன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.