உக்ரைன் ரஷ்யப் போர்: மீண்டும் பின்வாங்கும் ஜேர்மனி?
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து நடந்த விடயங்கள், ஜேர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைத்துவிட்டன.
தயக்கம் காட்டிய ஜேர்மனி
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, வெளிப்படையாக உக்ரைனுக்கு ஆதரவளிக்க ஜேர்மனி பெருமளவில் தயக்கம் காட்டியதை உலகம் அறியும். ஆனாலும், தொடர்ந்து நேட்டோ நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அளவுக்கு சென்றது ஜேர்மனி.
ஆனால், ரஷ்யா, தான் ஜேர்மனிக்கு இவ்வளவு காலமாக முறைந்த விலைக்குக் கொடுத்துவந்த எரிவாயுவை நிறுத்திவிட்டது. எரிவாயு நிறுத்தப்பட்டதால் நாட்டில் பெரும் குழப்பங்களை சந்தித்த ஜேர்மனி, இப்போது பொருளாதார மந்த நிலையை எட்டும் அளவுக்குச் சென்றுவிட்டது.
பின்வாங்கிறதா ஜேர்மனி?
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியான புடினுடன் தான் பேச விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ்.
நான் ரஷ்ய ஜனாதிபதியுடன் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது என்று கூறியுள்ள ஷோல்ஸ், தான் விரைவில் புடினுடன் பேச திட்டமிட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
தனது இலக்கு உக்ரைனுக்கு உதவுவதுதான் என்று கூறியுள்ள ஷோல்ஸ், அதே நேரத்தில், நேட்டோ அமைப்புக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான நேரடி மோதலை தவிர்ப்பதும் தனது நோக்கம் என்று கூறியுள்ளார்.
எப்போதுமே ஜேர்மனி தனியாக செயல்பட விரும்பியதில்லை என்று கூறியுள்ள ஷோல்ஸ், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்தே செயல்படுவதுதான் தன் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.
ஜேர்மன் சேன்சலரின் கூற்றுக்களைப் பார்க்கும்போது, ரஷ்யாவுடனான மோதல் ஜேர்மனியை பொருளாதார மந்த நிலையை எட்டும் அளவுக்குக் கொண்டு வந்துவிட்டதால், இப்போது ஜேர்மனி பின்வாங்குகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.