உக்ரைன் தலைநகரை சுற்றி வளைத்து வான்வழி தாக்குதல்: 17வது நாளாக தொடரும் போர் நிலவரம்
ரஷ்யப் படைகள் தலைநகர் கீவ்வை சுற்றிவளைத்துள்ள நிலையில் மற்ற உக்ரேனிய நகரங்களில் உள்ள பொதுமக்களின் பகுதிகளைத் தாக்கிவருகினறனர்.
உக்ரைனில் இன்று 17-வது நாளாக போர் தொடர்கிறது. இரு தரப்பினரிடையே நான்கு முறை பேச்சுவார்த்தை முடிந்த பிறகும் போரை முடிவுக்கும் கொண்டுவருவது தொடர்பில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. இதுவரை தோராயமாக 12,000 ரஷ்ய இராணுவ வீரர்களை உக்ரைனியர்கள் வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய படையினர் உக்ரைனின் தலைநகர் கீவை நெருங்கிவரும் நிலையில், இன்று அதிகாலை பெரும்பாலான உக்ரேனிய நகரங்களில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததாகவும், மக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களைத் தேடுமாறு வலியுறுத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் கீவ் (Kyiv), ஒடெசாவின் மேற்கு நகரமான எல்விவ் (Lviv), மற்றும் கார்கிவ் (Kharkiv), செர்காசி (Cherkasy) மற்றும் நாட்டின் வடகிழக்கில் உள்ள சுமி (Sumy) பிராந்தியத்தில் சைரன்கள் கேட்டதாக பல உள்ளூர் உக்ரேனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யப் படைகள் தெற்கு உக்ரைனின் மெலிடோபோலில் (Melitopol) கடுமையான தாக்குதல் நடத்தினர். அங்கு 10 பேர் கொண்ட குழு மெலிடோபோல் மேயர் இவான் ஃபெடோரோவை கடத்திச் சென்றது என்று உக்ரைன் பாராளுமன்றம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
அதேபோல், தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் நிலைமை மோசமாக உள்ளது. அந்நகரம் சுற்றி வளைக்கப்பட்டு தொடர்ந்து ரஷ்ய ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது. மரியுபோல் 11 நாட்களாக தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் உள்ளது. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஷெல் வீசப்படுவதாக நகரின் மேயர் கூறியுள்ள நிலையில், ஏற்கனவே 1,200 பொதுமக்கள் இறந்துவிட்டனர் மற்றும் மக்கள் பட்டினி கிடப்பதாகவும் தெருக்களில் சடலங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை உக்ரைனின் மத்திய நகரமான டினிப்ரோவில் மூன்று ஏவுகணைகள் பொதுமக்களின் கட்டிடங்களைத் தாக்கியது, ஒரு காலணி தொழிற்சாலையை அழைக்கப்பட்டது மற்றும் ஒரு காவலர் கொல்லப்பட்டார்.
கார்கிவ் அருகே உள்ள ஊனமுற்றோர் இல்லமும் குண்டுவீசி தாக்கப்பட்டது, அப்போது அங்கு 330 பேர் இருந்தனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேற்கு உக்ரைனில் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லுட்ஸ்க் மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் ஆகிய இராணுவ விமானநிலையங்களை தாக்கி செயலிழக்க செய்துள்ளதாக ரஷ்யா நேற்று அறிவித்தது.
இதனிடையே, மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் "ஏற்கனவே ஒரு மூலோபாய திருப்புமுனையை அடைந்துவிட்டதாக" கூறியுள்ளார். "உக்ரேனிய நிலத்தை விடுவிக்க இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என்று சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் அதைச் செய்வோம்" என்று அவர் கூறினார். "நாங்கள் ஏற்கனவே எங்கள் இலக்கை, எங்கள் வெற்றியை நோக்கி நகர்கிறோம்" என்றார்.
அமெரிக்க உதவியுடன் உக்ரைன் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ரஷ்யாவின் குற்றச்சாட்டை வாஷிங்டன் மற்றும் கீவ் ஆகிய இரண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர். மாறாக ரஷ்யா தான் இரசாயன ஆயுதம் அல்லது செர்னோபில் அணு மின் நிலையத்தின் மூலமாக கதிரியக்க கழிவுகளை கசியவிட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.