ரஷ்யாவின் எக்ஸ்-22 ரக சக்திவாய்ந்த ஏவுகணையை நடுவானில் காலி செய்த உக்ரைன்! வீடியோ
ரஷ்யா வீசிய எக்ஸ்-22 ரகத்தை சேர்ந்த நீண்டதூர ஏவுகணையை உக்ரைன் நடுவானில் அழித்துள்ளது.
இந்த தகவலை உக்ரைன் தளபதி உறுதிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 100 நாட்களை கடந்துள்ளது.
இதனால் உக்ரைன் தொடர்ந்து நிலைகுலைந்து வருகிறது. தற்போது தலைநகர் கீவ் நகரை மீண்டும் இலக்காக்கி இருக்கிறது ரஷ்யா. இதனால் போர் மீண்டும் வேகமெடுத்து உள்ளது.
அந்தவகையில் ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று கீவில் உள்ள ரெயில் என்ஜின் பழுதுபார்க்கும் தொழிற்சாலையை பதம் பார்த்ததாகவும், மற்ற ஏவுகணைகள் டிரஸ்கிவ்கா நகரில் கட்டிடங்களை சேதப்படுத்தியதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரம் ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், போரில் பழுதான உக்ரைன் தளவாடங்களை பழுதுநீக்கும் தொழிற்சாலைகளையும் இந்த தாக்குதலில் இலக்காக கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
இதற்கிடையே எக்ஸ்-22 ரகத்தை சேர்ந்த 5 நீண்டதூர ஏவுகணைகளை காஸ்பியன் கடலில் இருந்து கீவை நோக்கி ரஷியா வீசியதாகவும், இதில் ஒன்றை நடுவானிலேயே அழித்தாகவும் உக்ரைன் தளபதி ஒருவர் கூறினார்.
மீதமுள்ள 4 ஏவுகணைகளும் உக்ரைனின் உள்கட்டமைப்பு வசதிகளை தாக்கியதாக கூறிய அவர், இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.