உக்ரைன்-ரஷ்யா 4-ஆம் சுற்று பேச்சுவாத்தை; நேட்டோவிடம் ஜெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தல்..
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக போர் நீடித்துவரும் நிலையில், தற்போதைய நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான நான்காவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. இந்த முறை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் 'ஒரு சாதகமான முடிவு' கிடைக்கும் என இரு தரப்பிலிருந்தும் கூறப்படுகின்றன. அதன்படி இன்னும் சில நாட்களுக்குள் போர் முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக பெலாரஸில் இரு தரப்புக்கும் இடையே நடந்த மூன்று சுற்றுப் பேச்சுக்கள் முக்கியமாக மனிதாபிமானப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தபட்டது, பொதுமக்களை சண்டையிலிருந்து தப்பிக்க வைக்க நான்கு முறை இடைக்கால போர்நிறுத்தம் மட்டும் அறிவிக்கப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் எந்த சுமுக முடிவும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தைகளில் ஓரிரு நாட்களுக்குள் நல்ல முடிவு எட்டப்படலாம்: உக்ரைனும் ரஷ்யாவும் நம்பிக்கை
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேட்டோ அமைப்பிடம் தனது நாட்டின் மீது No Fly Zone (பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம்) அமுல்படுத்த இன்று மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை போலந்து எல்லைக்கு அருகில் உள்ள உக்ரேனிய இராணுவத் தளத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், நேட்டோவின் உறுப்பு நாடுகள் விரைவில் ரஷ்யப் படைகளால் தாக்கப்படலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பின் முதல் வாரத்தில் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையத்தில், மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று உக்ரைன் தலைநற் கீவில் உள்ள ஆற்றல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 24 அன்று ஜனாதிபதி விளாடிமிர் புடினால் தொடங்கப்பட்ட ரஷ்ய படையெடுப்பின் காரணமாக, உக்ரைனில் இருந்து வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 2.7 மில்லியனாக உள்ளது என்று ஐ.நா. கூறியுள்ளது. அவர்களில் பாதிக்கு மேல் போலந்து சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.