மூன்றாம் உலகப் போர் இப்படித்தான் இருக்கும்! ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை
மூன்றாம் உலகப் போர் 'அணுசக்தி மற்றும் அழிவுகரமானதாக' இருக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கிறது.
உக்ரைன் NATO அமைப்பில் இணைவதற்கு எதிராக ரஷ்யா தொடந்து இன்று ஏழாவது நாளாக உக்ரைன் நகரங்களில் தாக்குதல் நடத்திவருகிறது. ஐரோப்பிய மற்றும் மேற்கு உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல வகையிலான பொருளாதார தடைகளை அறிவித்து எச்சரித்து வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் வீழ்ச்சி தீவிரமடைந்து வருவதால், மூன்றாம் உலகப் போர் 'அணுசக்தி மற்றும் அழிவுகரமானதாக இருக்கும்' என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் உத்தரவின் பேரில் உக்ரைன் அமைதிப் பேச்சுக்களை தாமதப்படுத்துவதாகவும் லாவ்ரோவ் குற்றம் சாட்டினார்.
மேலும் உக்ரைன் தனது சொந்த அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதே இந்தப் படையெடுப்பின் நோக்கம் என்று கூறிய அவர், அதனை மீறி அணு ஆயுதங்களை வாங்கினால் கீவ் ஒரு 'உண்மையான ஆபத்தை' எதிர்கொள்ளும் என்று அவர் எச்சரித்தார்.
உக்ரைனில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து ரஷ்யா அதன் சொந்த கைப்பாவை தலைமையை நிறுவ விரும்புகிறது என்று மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
அதேபோல் உக்ரைன் என்றும் NATO அமைப்பில் இணையக்கூடாது, மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தனக்கென சொந்தமாக ஆணு ஆயுதங்களை வாங்கக்கூடாது என்பதில் ரஷ்யா உறுதியாக உள்ளது.
உக்ரைனில் நேட்டோ ஈடுபடக்கூடாது என்று மறைமுகமாக அச்சுறுத்தும் விதமாக, ரஷ்யாவின் இந்த நடவடிக்கையில் தலையிடும் எந்த தேசமும் 'வரலாற்றில் நீங்கள் சந்தித்ததை விட பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.