பிரித்தானியா வந்துள்ள உக்ரைன் அகதிகளுக்கு உதவுவதற்காக இந்திய வம்சாவளியினர் மேற்கொண்டுள்ள முயற்சி
இந்திய வம்சாவளியினர் ஒருவர், பிரித்தானியாவுக்கு அகதிகளாக வந்துள்ள உக்ரைன் பெண்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு உதவுவதற்காக, தனது தாய் நினைவாக உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனம் மூலமாக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் இந்திய வம்சாவளியினரான தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Rajinder Paul Loomba, தனது தொண்டு நிறுவனம் மூலமாக பிரித்தானியாவுக்கு அகதிகளாக வந்துள்ள உக்ரைன் பெண்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு உதவுவதற்காக 60,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக நிதி திரட்ட முன்வந்துள்ளார்.
தன் விதவைத் தாயின் நினைவாக, இந்தியாவிலுள்ள மற்றும் உலக நாடுகளிலுள்ள விதவைகளுக்கு உதவுவதற்காக அவர் உருவாக்கிய The Loomba Foundation என்னும் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக அவர் இந்த உதவியை செய்ய முன்வந்துள்ளார்.
அத்துடன், பிரித்தானியாவிலுள்ள தனது ஆடை தயாரிப்பு நிறுவனமான Loomba குழுமத்தின் கடைகளில், நேரடியாகவோ அல்லது ஒன்லைன் வாயிலாகவோ உக்ரைன் அகதிகளின் குடும்பத்தினர் ஆடைகள் முதலான அத்தியாவசிய பொருட்கள் வாங்கிக்கொள்வதற்காக குடும்பம் ஒன்றிற்கு 100 பவுண்டுகளுக்கான வவுச்சரையும் The Loomba Foundation வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.