நாட்டை கைப்பற்ற வந்த ரஷ்ய வீரர்களுக்காக உக்ரைன் செய்த மனிதாபிமான காரியம்!
உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடையும் ரஷ்ய வீரர்களை அவர்களின் குடும்பத்தார் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.
நெருக்கடியான காலத்திலும் கூட, சிறிய ஐரோப்பிய நாடான உக்ரைன் தனது மனிதாபிமான செயலை கடைபிடிப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
உக்ரைனில் ரஷ்ய படையினர் 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் மற்றும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போர் கைதிகளாக கொல்லப்பட்ட அல்லது பிடிப்பட்ட ரஷ்ய வீரர்களுக்கு என hotline எனப்படும் நேரடித் தொலைபேசி இணைப்புகளை உக்ரைன் அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்த எண்களுக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் ரஷ்ய தாய்மார்களிடம் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ரஷ்ய வீரர்களின் தாயார்கள் மற்றும் குடும்பத்தார்கள் தான்.
இதன்மூலம் ரஷ்ய வீரர்களின் குடும்பத்தார், அவர்களின் நாடு போரில் ஈடுபடுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்துகிறது. இந்த hotline தொலைபேசி திட்டத்திற்கு ’Come Back Alive from Ukraine' (உக்ரைனில் இருந்து உயிருடன் திரும்பி வாருங்கள்) என பெயரிடப்பட்டுள்ளது.
இது மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்ட விடயம் என்றாலும், இதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் தங்கள் வீட்டு ஆட்களும் சென்றுள்ளனர் என ரஷ்ய வீரர்கள் குடும்பத்தார் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையில் ரஷ்ய வீரர்கள் மற்றும் துருப்புகளை உக்ரைன் ராணும் பிடித்து வைத்துள்ளது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
அதே சமயம், ரஷ்ய வீரர்களை காட்டிலும் உக்ரைன் வீரர்கள் தான் அதிகளவில் காயம் மற்றும் உயிரிழப்பை சந்தித்துள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு துறை சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.