திருடப்பட்ட தானியம் அது... இஸ்ரேலை கடுமையாக தாக்கிய உக்ரைன்
ரஷ்யாவால் திருடப்பட்ட உக்ரேனிய தானியங்களை இஸ்ரேல் இறக்குமதி செய்ததாகக் கூறப்படுவதை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடுமையாகச் சாடியுள்ளார்.
சட்டவிரோதமாக ஏற்றுமதி
உக்ரேனிய விவசாய நிலங்களின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ரஷ்யா, தற்போது அங்கிருந்து தானிய ஏற்றுமதியும் முன்னெடுத்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய தானிய உற்பத்தியாளர்களில் ஒன்றான உக்ரைன், 2022 பிப்ரவரியில் ரஷ்யா படையெடுத்ததிலிருந்து கைப்பற்றிய பிரதேசங்களிலிருந்து விவசாயப் பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதாக ரஷ்யா மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், திருட்டு தானியங்களை ஏற்றிச் செல்லும் மற்றொரு கப்பல் இஸ்ரேலில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளதுடன், சரக்குகளை இறக்கத் தயாராகி வருகிறது என்றார்.
மேலும், நாட்டின் துறைமுகங்களுக்கு எந்தெந்தக் கப்பல்கள் வந்து சேர்கின்றன என்பதையும், அவை எத்தகைய சரக்குகளை ஏற்றி வருகின்றன என்பதையும் இஸ்ரேலிய அதிகாரிகளால் அறியாமல் இருக்க முடியாது எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உக்ரைன் நிர்வாகத்திற்கு தெரியாமல் தங்களின் தானியங்களை வாங்குவதில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகத் தடைகளை விதிக்க தாங்கள் தயாராகி வருவதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச் சதியில் ஈடுபட்டவர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தண்டனைகளை விதிக்குமாறு, தனது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

இதனிடையே, உக்ரேனிய தானியங்கள் ஹைஃபா துறைமுகத்திற்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இஸ்ரேலியத் தூதரை அழைத்துப் பேசப்போவதாகக் ஜெலென்ஸ்கியின் அலுவலகம் திங்களன்று தெரிவித்தது.
தலையிட விரும்பவில்லை
இந்த நிலையில், இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் இடையே வளர்ந்து வரும் இராஜதந்திரப் பூசல், அவ்விரு நாடுகளும் தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு விவகாரம் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
மட்டுமின்றி, நாங்கள் இது குறித்து எந்த விதத்திலும் கருத்து தெரிவிக்கவோ அல்லது இந்த விடயத்தில் தலையிடவோ விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது, உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையில் திடீர் உயர்வைத் தூண்டியது. இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபையும் துருக்கியும் இணைந்து, அந்த ஆண்டின் பிற்பகுதியில் கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
ஆனால், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகத் தடைகளில் இருந்து நிவாரணம் வேண்டும் என்று கூறி, ரஷ்யா பின்னர் அந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டது.
2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கருங்கடலில் உள்ள முக்கிய ஏற்றுமதித் துறைமுகங்கள் உட்பட, உக்ரைனின் நான்கு தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களை இணைத்துக்கொண்டதாக ரஷ்யா உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |