8 தளபதிகள், 300 அதிகாரிகள்: விளாடிமிர் புடினுக்கு மரண பயம் காட்டிய உளவாளிகள்
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் ரஷ்யாவின் 8 முக்கிய தளபதிகள், 36 படைத்தலைவர்கள் மற்றும் 300 இராணுவ உயர் அதிகாரிகளை படுகொலை செய்ய உக்ரேனுக்கு அமெரிக்க உளவாளிகள் உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெறும் மூன்று நாட்களில் உக்ரைன் நாட்டை கைப்பற்ற புறப்பட்ட ரஷ்ய துருப்புகள் இரண்டு மாதங்களாக போரிட்டு வருகிறது. கடந்த வாரம் விளாடிமிர் புடினின் துருப்புகளுக்கு பேரிடியாக 36வது படைத்தலைவரை ரஷ்யா இழந்துள்ளது.
41 வயதான Mikhail Nagamov கடந்த 13ம் திகதி உக்ரேனிய வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டுமின்றி, 8வது ஒருங்கிணைந்த ஆயுதப்படையின் துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் விளாடிமிர் ஃப்ரோலோவ், இந்த மாத தொடக்கத்தில் உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்யாவின் எட்டாவது தளபதி என கூறப்படுகிறது.
மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பில் சுமார் 20,000 வீரர்கள் ரஷ்ய தரப்பில் கொல்லப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, அமெரிக்க உளவாளிகளின் உதவியால் உக்ரேனிய வீரர்கள் ரஷ்யாவுக்கு பலத்த பதிலடியை அளித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் செய்தி ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய துருப்புகள் தாக்குதலுக்கு தயாராகும் நேரம் மற்றும் இலக்கினை அமெரிக்க உளவாளிகள் உக்ரைன் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வணிக ரீதியான செயற்கைக்கோள் படங்கள் தரவுகளாக அளிக்கப்பட்டுள்ளது எனவும், குறிப்பிட்ட பகுதியில் ரஷ்ய துருப்புகளின் நகர்வுகள் துல்லியமாக கணிக்கப்பட்டு உக்ரேனுக்கு தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.