ரஷ்யாவின் அணுசக்தி நிலையத்தின் மீது தாக்குதல்: நள்ளிரவில் நடந்த ட்ரோன் சண்டை!
அணுமின் நிலையத்தின் மீது இரவோடு இரவாக உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல்
உக்ரைனின் 34 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இரவோடு இரவாக ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்யா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
அணுமின் நிலையத்தின் மீதான இந்த தாக்குதலில், அங்குள்ள மின்சாரம் மற்றும் எரிசக்தி வசதிகள் பலத்த சேதம் அடைந்து இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஊழியர்கள் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும், நிலைமை விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
IAEA விளக்கம்
ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம்(IAEA) உக்ரைன் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஆனால் எப்படி இருப்பினும் அணுசக்தி வசதிகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என IAEA இயக்குநர் ரஃபேல் மரியானோ க்ரோஸ்ஸி வலியுறுத்தியுள்ளார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்கள்
அத்துடன் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பில், நாட்டிற்குள் நுழைந்த 95 உக்ரைனிய டிரோன்களை வான் பாதுகாப்பு படைகள் வெற்றிகரமாக இடைமறித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதே சமயம் ரஷ்யா படைகளால் ஏவப்பட்ட 72 டிரோன்களில் 48 டிரோன்களை வெற்றிகரமாக இடைமறித்ததாக உக்ரைன் தரப்பும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |