ட்ரம்பின் முடிவால் கடும் சிக்கலில் உக்ரைன்... புரட்டியெடுக்கும் ரஷ்யா
உக்ரைனுக்கான அமெரிக்க ஆயுதங்களின் ஏற்றுமதி ட்ரம்ப் நிர்வாகத்தால் தடுக்கப்படும் என்ற நெருக்கடியான சூழலில், ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள உக்ரைன் தடுமாறி வருகிறது.
படைகளை குவித்துள்ளது
கிழக்கு உக்ரைனில் இராணுவ விநியோக பாதைகளுக்கு முக்கியமான இரண்டு நகரங்களுக்கு அருகே ரஷ்யா ஊடுருவல்களை மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவ அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.
சமீபத்திய வாரங்களில், பெரும் இழப்புகள் இருந்தபோதிலும் ரஷ்யா படைகளை குவித்துள்ளது, போக்ரோவ்ஸ்க் மற்றும் கோஸ்டியான்டினிவ்காவின் இருபுறமும் கிராமப்புறங்களில் முன்னேறியுள்ளது.
மட்டுமின்றி, போர்முனையில் ரஷ்யாவின் முன்னேற்றங்களுடன், கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைகின்றன. உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவு தடுமாறி வருவதற்கான அறிகுறிகளைத் தொடர்ந்தே ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது.
2022ல் ரஷ்யா முன்னெடுத்த போர் தொடர்பில், ஜனாதிபதி ட்ரம்ப் இதுவரை முன்னெடுத்துள்ள போர் நிறுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. ட்ரம்பின் ரஷ்ய ஆதரவு நிலையை போர் நிறுத்தம் ஏற்படாமல் நீடிப்பதன் காரணமாகவும் கூறப்படுகிறது.
பின்னடைவை எதிர்கொள்ளும்
ரஷ்ய தாக்குதலின் நோக்கங்களில் ஒன்று டோனெட்ஸ்க் பிராந்தியத்தை மொத்தமாக கைப்பற்றுவதாகும். ரஷ்யா தற்போது போக்ரோவ்ஸ்க் பகுதியில் 111,000 வீரர்களைக் கொண்டுள்ளது, அப்பகுதியை கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ரஷ்யா கைப்பற்ற முயற்சித்து வருவதாக உக்ரைனின் உயர்மட்ட ஆயுதப்படைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி கடந்த வாரம் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு தற்போது தேவையான சில குறிப்பிட்ட ஆயுதங்களை முடக்குவதால், போர்க்களத்தில் உக்ரைன் கடும் பின்னடைவை எதிர்கொள்ளும். மேலும் தற்போதுள்ள ஆயுதங்களால் வெறும் 30 கிலோ மீற்றர் தொலைவு வரை மட்டுமே தாக்க முடியும்.
ரஷ்யா இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆயுதங்கள் திரட்டி தாக்குதலை தீவிரப்படுத்தும். ஜூன் மாதத்தில் மட்டும் ரஷ்ய இராணுவம் 556 சதுர கிலோமீற்றர் உக்ரைன் பிரதேசத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |