5,000 கடந்த ரஷ்ய துருப்புகளின் பலி எண்ணிக்கை... உக்ரைனில் இருந்து வெளிவரும் பகீர் தகவல்
மூன்றே நாட்களில் உக்ரைனை கைப்பற்றி, புதிய அரசை நிறுவ இருப்பதாக சூளுரைத்த ரஷ்யாவின் அனைத்து திட்டங்களும் சுக்கலாக நொறுங்கியுள்ள நிலையில், முதல் நான்கு நாட்களில் பலியான ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
ரஷ்யா திட்டமிட்டது போன்று உக்ரைனில் நிலைமை கட்டுக்குள் இல்லை என்பது மட்டுமின்றி, மூன்றே நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றி, தற்போதைய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பதவியை பறித்து, ரஷ்யாவுக்கு ஆதரவான ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கவே புடின் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் எதிர்பாராதவகையில் உக்ரைன் ராணுவத்தின் எதிர்தாக்குதலில் ரஷ்யாவின் கனவு தகர்ந்தது. மட்டுமின்றி ரஷ்ய தரப்பில் கடும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவே உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான போர் 6வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய துருப்புகளில் 5,300 வீரர்களை கொன்று குவித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. குறித்த தகவலை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
இந்த உயிரிழப்புகள் போர் துவங்கிய முதல் நான்கு நாட்களில் ஏற்பட்டவை எனவும், அத்துடன் ரஷ்யாவின் 191 டாங்கிகள், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகொப்டர்கள் மற்றும் 816 போர் தளவாடங்களையும் உக்ரைன் ராணுவம் சேதப்படுத்தியுள்ளது.
உக்ரைன் வெளியிட்டுள்ள குறித்த தகவல்களை ரஷ்யா இதுவரை மறுக்கவில்லை என்பதுடன், தங்கள் பக்கம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது உண்மை தான் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை போரின் முதல் நாளில் 94 ரஷ்ய வீரர்களை உக்ரைன் ராணுவம் கொன்றுள்ளதை ஐக்கிய நாடுகள் மன்றம் வெளியிட்ட செய்தியில் உறுதி செய்திருந்தது.
மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையேயான போரில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மன்றம் குறித்த செய்தியில் வெளிப்படுத்தியிருந்தது.