உக்ரைனின் பலத்தை அவர்கள் இனி அறிந்துகொள்வார்கள்.. சுதந்திர தினத்தன்று சூளுரைத்த ஜெலென்ஸ்கி
ரஷ்யா மீதான பழிவாங்கல் நடவடிக்கை இனி தீவிரமடையும் என உக்ரைன் சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சூளுரைத்துள்ளார்.
மிகவும் சிக்கலான விடயம்
ஆகஸ்டு 6ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அதிரடியாக ஊடுருவலை முன்னெடுத்த உக்ரைன் படைகள் உலக நாடுகளுக்கு வியப்பை அளித்ததுடன், ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சனிக்கிழமை உக்ரைனின் 33வது சுதந்திர தினத்தன்று காணொளி ஒன்றில் உரையாற்றியுள்ள ஜெலென்ஸ்கி, குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனின் நடவடிக்கை என்பது வடக்கில் ரஷ்ய தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான ஒரு தடுப்புத் தாக்குதல் என்றார்.
அத்துடன் குர்ஸ்க் தாக்குதல் என்பது உக்ரைனின் தற்போதைய நிலையில், மிகவும் சிக்கலான விடயம் என்றும் ஆனால், எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், உக்ரைனுக்குள் எதிரி என்ன கொண்டுவந்தானோ அதையே அவன் நாட்டுக்கும் உக்ரைன் திருப்பி அளித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அத்துடன், உக்ரைனில் தீமையை விதைக்க நினைக்கும் எவரும் அதன் பலனைத் தங்கள் நாட்டில் அறுவடை செய்வார்கள் என்றும் ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளிடம்
இதனிடையே, ரஷ்யா மீதான உக்ரைனின் ஊடுருவல் நடந்து இரண்டு வாரங்களில் 230 கைதிகளை விடுவிக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவுக்குள் உக்ரைன் படைகள் முன்னேறி வந்தாலும், அதேப்போன்று உக்ரைன் பகுதியிலும் ரஷ்யா முன்னேற்றம் கண்டுள்ளது.
இதனால் உக்ரைனின் மிக முக்கியமான Pokrovsk பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவுக்குள் தீவிர தாக்குதலை முன்னெடுக்கும் பொருட்டு, நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் அனுமதி கோரியுள்ளது.
இந்த நடவடிக்கை ரஷ்யாவை கடும் நெருக்கடிக்கு தள்ளும் என்றும், இதனால் போர் நிறுத்த நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுக்கலாம் என்றும் உக்ரைன் நம்புகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |