உங்கள் பிள்ளைகளின் சாவை தடுக்கவும்: ரஷ்ய வீரர்களின் தாய்மார்களிடம் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்
ரஷ்ய இராணுவ வீரர்களின் தாய்மார்களிடம், தங்கள் மகன்களை உக்ரைனுக்கு போருக்கு அனுப்பவேண்டாம், இங்கு வந்து அவர்கள் கொல்லப்படுவதையும், சிறைபிடிக்கப்படுவதையும் தடுக்குமாறு உக்ரைனிய ஜானதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு தரப்பிலும் இராணுவ வீரர்களில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவருகிறது. குறிப்பாக உக்ரைன் தரப்பில் அப்பாவி மக்கள் அதிகமாக பலியாகிவருகின்றனர். மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர்.
அதேபோல், உக்ரைனில் தோராயமாக 100 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்சேதங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. ரஷ்ய வீரர்கள் உக்ரைனின் பல நகரங்களில் புதிதாக தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். மேலும், தலைநகர் கீவை நெருக்கமாக சுற்றிவளைத்து வான்வெளி தாக்குல்களில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய வீரர்களின் தாய்மார்கள் தங்கள் மகன்களை உக்ரைனுக்கு அனுப்புவதைத் தடுக்குமாறு வலியுறுத்தினார்.
டெலிகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ உரையில், ஜெலென்ஸ்கி, "ரஷ்ய தாய்மார்களுக்கு, குறிப்பாக கட்டாயப்படுத்தப்பட்ட தாய்மார்களுக்கு இதை மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன். உங்கள் குழந்தைகளை வெளிநாட்டுக்கு போருக்கு அனுப்பாதீர்கள்" என்று கூறினார். அவர், "உங்கள் மகன் எங்கே இருக்கிறான் என்பதைச் சரிபார்க்கவும். உக்ரைனுக்கு எதிரான போருக்கு உங்கள் மகன் அனுப்பப்படலாம் என்று உங்களுக்குச் சிறிதளவு சந்தேகம் இருந்தால், அவர் கொல்லப்படுவதையோ அல்லது பிடிபடுவதைத் தடுக்க உடனடியாக தடுக்கவும்" என்றார்.
கடந்த வாரம் உக்ரைன் எல்லையில் கைப்பற்றப்பட்ட ரஷ்ய வீரர்களின் தாய்மார்களை, தங்களள் குழந்தைகளை வந்து அழைத்து செல்லுமாறு ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்தார். மேலும், உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் தொலைபேசி எண்களையும் மின்னஞ்சலையும் வெளியிட்டது, அதன் மூலம் அவர்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம் என கூறியது.
ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "உக்ரைனில் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் மனிதர்களின் துன்பங்கள் குறித்து மிகவும் கவலை கொள்கிறது" என்று கூறியது.
மேலும், தாக்குதல்களுக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்திய அந்த அறிக்கையில், ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். ரஷ்யப் படைகள் மக்கள்தொகை நிறைந்த பகுதிகளில் அல்லது அதற்கு அருகாமையில் பரந்த அளவிலான தாக்கங்களைக் கொண்ட வெடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இதில் கனரக பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள், அத்துடன் விமானத் தாக்குதல்கள், ஏவுகணைகளும் அடங்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
OHCHR-ன் படி, உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 549 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 957 பேர் காயம் அடைந்துள்ளனர். இருப்பினும், சில அதிகாரிகள் உண்மையான இறப்பு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.