டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம்: முக்கிய விவரங்களை வெளியிட்ட ஜெலென்ஸ்கி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ள 20 அம்ச அமைதி திட்டம் குறித்த முக்கிய தகவலை ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அமைதி முயற்சி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குழு 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தைகளும் கைகூடாத நிலையில், டிரம்பின் இந்த முன்முயற்சி நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
20 அம்ச அமைதி திட்டம்
புளோரிடாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா உக்ரைன் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அமெரிக்காவின் புதிய 20 அம்ச அமைதித் திட்டத்தின் முக்கிய விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உக்ரைன் ராணுவம் நிலைக் கொண்டுள்ள கிழக்குப் பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரம் ராணுவம் பின் வாங்கவும், அப்பகுதியை இராணுவமற்ற வலயங்களாக உருவாக்க முன்வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ரஷ்யாவும் தனது படைகளை அதே தூரம் பின்வாங்க செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த பகுதி பொருளாதார மையமாக மாற்றப்பட்டு அவற்றை உக்ரைன் பொலிஸார் நிர்வகிப்பார்கள் என்றும், இதன் எல்லைகளை சர்வதேச படைகள் கண்காணிக்கும் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இறையாண்மையை இந்த புதிய வரைவு பாதுகாப்பதாக சுட்டிக் காட்டிய ஜெலென்ஸ்கி, உக்ரைன் தங்களது அமைதி காலத்தில் சுமார் 8 லட்சம் இராணுவ வீரர்களை பாராமரிக்கும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி திட்டம் குறித்து உக்ரைன் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், ரஷ்யா இந்த அமைதி முயற்சியை தடுக்க முயன்றால் அமெரிக்கா அதிகப்படியான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி பதிலடி கொடுப்பதோடு பொருளாதாரத் தடைகளையும் விதிக்கும் என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |