கல்லூரி மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்: நால்வர் உயிரிழப்பு..30க்கும் மேற்பட்டோர் காயம்
லுஹான்ஸ்க் பகுதியில் கல்லூரி மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 பேர் பலியாகினர்.
தொழில்நுட்பக் கல்லூரி மீது தாக்குதல்
கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு தொழில்நுட்பக் கல்லூரி மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள ரஷ்யா மற்றும் கிரெம்ளின் ஆதரவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட தலைவரான லியோனிட் பாசெக்னிக், தாக்குதல் நடந்த நேரத்தில் மத்திய நகரமான ஸ்டாரோபில்ஸ்கில் உள்ள ஸ்டாரோபில்ஸ்க் தொழில்முறைக் கல்லூரி மற்றும் அதன் தங்குமிடத்திற்குள் டசின் கணக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்ததாக கூறினார்.
மேலும், "35 பேர் பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட காயங்களுடன் தற்போது தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்" எனவும் எழுதினார்.
கொடுமையான குற்றம்
ரஷ்யாவின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பான புலனாய்வுக் குழு, உக்ரைன் தொழில்நுட்பக் கல்லூரி மீது மொத்தம் 4 ட்ரோன்களை ஏவியதாகக் கூறியது.
இதனையடுத்து சட்ட அமலாக்க அமைப்பு பயங்கரவாதம் தொடர்பாக ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியது. ஆனால், உக்ரைனிடம் இருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை.
கல்லூரி மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது கொடுமையான குற்றம் எனவும், இக்குற்றத்திற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கண்டனம் தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |