பாம்பு தீவில் மீண்டும் உயரப்பறந்த உக்ரேனியக் கொடி: தப்பியோடிய ரஷ்ய துருப்புகள்
கடந்த வாரம் ரஷ்ய படைகள் புறக்காவல் நிலையத்திலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் கருங்கடலில் உள்ள பாம்பு தீவில் மீண்டும் உக்ரேனியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
குறித்த தகவலை உக்ரேனிய இராணுவ தரப்பும் உறுதி செய்துள்ளதுடன், மிக விரைவில் பாம்பு தீவில் இராணுவ பலத்தை அதிகரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
உக்ரேனியக் கொடி பறக்கவிடப்பட்டது குறித்த புகைப்படத்தையும் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதனிடையே, பாம்பு தீவில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறியுள்ளதால், உக்ரேனிய துறைமுகங்களில் நீடித்து வந்த ரஷ்ய துருப்புகளின் முற்றுக்கை விலகும் என்றே நம்பப்படுகிறது.
ஆனால், உக்ரேனிய தானியங்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு இது தற்போதைய சூழலில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருங்கடல் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் மற்றும் ரஷ்யாவால் அப்பகுதியில் இன்னமும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றே நிபுணர்கள் தரப்பு நம்புகிறது.
துறைமுகங்களின் கட்டுப்பாடுகளை விலக்கினால் தானியங்கள் வெளியேற வாய்ப்பாக அமையும், ஆனால் கண்டிப்பாக நட்பு நாடுகளின் ஆதரவு வேண்டும், மட்டுமின்றி இந்த விவகாரத்தில் துருக்கி முக்கிய பங்காற்றலாம் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் பாம்பு தீவை ரஷ்ய துருப்புகள் கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது வியாழக்கிழமை நல்லெண்ணத்தின் அடிப்படையில் துருப்புகளை விலக்கிக்கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.