அகதிகளாக பிரித்தானியா வரும் உக்ரைனியர்கள்: பொதுமக்களுக்கு அரசு விடுக்கும் வேண்டுகோள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனிலிருந்து அகதிகளாக பிரித்தானியா வருவோரை தங்கள் வீடுகளில் தங்கவைக்கவும், அவர்களுக்கு வேலை கொடுக்கவும் பிரித்தானிய அரசு தன் குடிமக்களை அரசு கேட்டுக்கொள்ள இருக்கிறது.
உக்ரைனியர்களை பிரித்தானியாவுக்கு வரவேற்கும் விடயத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் கையாண்ட விதம் சரியில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
பிரித்தானியாவுக்கு வருவதற்காக பல்லாயிரக்கணக்கான உக்ரைனியர்கள் விசா கோரி விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 760 பேருக்கு மட்டுமே உள்துறை அலுவலகம் விசா வழங்க, ஏராளமானோர் கலாயிஸ் நகரிலேயே திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
பிரித்தானியா உக்ரைனியர்களைக் கையாண்ட விதம் குறித்து கடுமையான விமர்சனம் எழுந்ததையடுத்து, பிரித்தானிய அரசு வேறொரு திட்டத்தைத் தீட்டி வருகிறது.
அதன்படி, அகதிகளாக வரும் உக்ரைனியர்களை பிரித்தானியர்கள் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொண்டு அவர்களுக்காக ஒரு அறையை ஒதுக்கலாம். அவர்களுக்கு வேலை அளிக்கலாம்.
இந்த திட்டம் தொடர்பான பணிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், அதுவிரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.