ரஷ்யா உக்கிரம்... கொத்தாக புதைக்கப்படும் உக்ரேனிய மக்களின் சடலங்கள்: நெஞ்சை உலுக்கும் காட்சி
ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்களை கொத்தாக புதைக்கும் கோர காட்சிகள் புகைப்படமாக வெளியாகி பார்ப்பவர்கள் நெஞ்சை உலுக்கியுள்ளது.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புகள் கடுமையான தாக்குதலை முன்னெடுத்துள்ளதுடன், பெரும் சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தினர்.
அரை மில்லியன் மக்கள் குடியிருந்து வந்த மரியுபோல் நகரில், ரஷ்ய துருப்புகள் முற்றுகையிட்ட ஒருவாரத்தில் சுமார் 1,200 பேர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில், சவக்கிடங்குகள் அனைத்தும் நிரம்பியதாக தகவல் வெளியாக, நீளமாக 25 மீற்றர் அளவுக்கு தோண்டப்பட்ட குழியில் அந்த சடலங்களை மொத்தமாக புதைக்க நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 40 சடலங்களை கொத்தாக புதைத்துள்ளனர். புதன்கிழமை மேலும் 30 சடலங்களை மொத்தமாக புதைத்துள்ளனர். புதைக்கப்பட்டவர்களில் இராணுவ வீரர்களும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் குடும்ப உறுப்பினர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, மரியுபோல் நகரில் எஞ்சியுள்ள மக்கள் மின்சாரம், உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகள் ஏதுமின்றி அல்லல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் ரஷ்ய துருப்புகளின் கண்மூடித்தனமான தாக்குதலில் 17 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பல எண்ணிக்கையிலான மக்கள் காயங்களுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
மரியுபோல் நகரை பொறுத்தமட்டில், ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உத்தியோகப்பூர்வ தகவல் 1,200 என வெளியிடப்பட்டாலும், இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றே கூறப்படுகிறது.