உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு திட்டத்திலும் உக்ரேனியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
போர்க்கொடி
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அந்த நாடு தனது நிலம் மற்றும் ஆயுதங்களில் சிலவற்றை விட்டுக்கொடுத்து, இராணுவத்தின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ட்ரம்ப் அதிகாரிகள் வகுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த நிலையிலேயே ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஐரோப்பியர்கள் எப்போதும் ஆதரிப்பது நீண்டகால மற்றும் நியாயமான அமைதி, அதை அடைவதற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால், அப்படியான ஒரு திட்டம் வகுக்கப்படும் என்றால், அதில் உக்ரேனியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இடம்பெற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

எந்தவொரு சமாதானத் திட்டமும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் சரணடைவதற்கு சமமாக இருக்கக்கூடாது என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Jean-Noel Barrot தெரிவித்துள்ளார்.
கட்டாயம்
பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் அதே கருத்தையே முன்வைத்துள்ளனர். ஆனால், உக்ரைன் போர் தொடர்பில் அனைவரும் ஏற்றுகொள்ளும் எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்கா இதுவரை முன்வைக்கவில்லை என்றும்,
ரஷ்யாவிற்கு ஆதரவான போக்கையே ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, அமெரிக்கா முன்வைக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தரப்பில் இருந்து அழுத்தம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.

நிலம் மற்றும் ஆயுதங்களைக் கைவிடுவதானால், அது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் பிராந்திய ஆசைகளை ஜெலென்ஸ்கி நிர்வாகம் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |