கூடவே இருந்து குழி பறித்த நண்பன்! இந்திய கிரிக்கெட் அணி வீரரிடம் பெரிய மோசடி
இந்திய கிரிக்கெட் அணி வீரர் உமேஷ் யாதவிடம் அவர் மேலாளர் பல லட்சம் மோசடி செய்துள்ளார்.
உமேஷ் யாதவ்
மகாராஷ்டிர மாநிலத்தை சோ்ந்த உமேஷ் யாதவ் கடந்த 2014-இல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றாா். அப்போது, அவருடைய நண்பா் சைலேஷ் தாக்கரே என்பவரை தன்னுடைய மேலாளராக நியமித்தாா்.
உமேஷ் யாதவின் வங்கிக் கணக்கு, வருமான வரி மற்றும் நிதிசாா் செயல்பாடுகளை சைலேஷ் தாக்கரே கவனித்து வந்தாா். இந்நிலையில், நாகபுரியில் மனை வாங்க விரும்பிய உமேஷ் யாதவ், இது குறித்து சைலேஷ் தாக்கரேயிடம் தெரிவித்துள்ளாா். காலி மனை குறித்து உமேஷ் யாதவிடம் தகவல் தெரிவித்த சைலேஷ், அந்த மனையை வாங்க ரூ.44 லட்சத்தைக் கேட்டுள்ளாா்.
இதையடுத்து, சைலேஷின் வங்கி கணக்கில் ரூ.44 லட்சத்தை உமேஷ் யாதவ் டெபாசிட் செய்துள்ளாா். குறிப்பிட்ட நிலத்தைத் தனது பெயரில் வாங்கிய சைலேஷ் தாக்கரே, இது குறித்து உமேஷ் யாதவிடம் தகவல் தெரிவிக்கவில்லை.
AFP/Getty Images
பொலிசார் விசாரணை
இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த உமேஷ் யாதவ், நிலத்தைத் தனது பெயருக்கு மாற்றும்படி சைலேஷிடம் கேட்டுள்ளாா். அதற்கு ஒப்புக்கொள்ளாததுடன், பணத்தை திரும்ப ஒப்படைக்கவும் சைலேஷ் மறுத்துவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் உமேஷ் யாதவ் புகாரளித்தாா். இதனையடுத்து சைலேஷ் தாக்கரே மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.