கிரிக்கெட் போட்டியின் போது சூழ்ந்த தேனீக்கள் - நடுவர் உயிரிழப்பு; வீரர்கள் காயம்
கிரிக்கெட் போட்டியின் போது தேனீக்கள் தாக்கியதில் நடுவர் மாணிக் குப்தா உயிரிழந்துள்ளார்.
கிரிக்கெட் மைதானத்தை சூழ்ந்த தேனீக்கள்
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சப்ரு மைதானத்தில், கான்பூர் கிரிக்கெட் சங்கம்(KCA) சார்பில் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

YMCC மற்றும் பாரமவுண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, திடீரென பாரிய தேனீகூட்டம் மைதானத்திற்கு வந்து அங்கிருந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை தாக்கியது.
இந்த தாக்குதலை எதிர்பாராத பலரும் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடினர். கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் படுத்து தப்ப முயன்றனர்.
ஆனால் நடுவராக பணியாற்றிய 65 வயதான மாணிக் குப்தாவை தேனீக்கள் கடுமையாக தாக்கியது.
நடுவர் உயிரிழப்பு
இதில், மயக்கமடைந்த அவரை முதலில், சுக்லகஞ்சில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உடல்நிலை மோசமான நிலையில், கான்பூரில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மற்றொரு நடுவரான ஜெகதீஷ் சர்மாவும் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், 20 வீரர்களும் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த மாணிக் குப்தா கடந்த 30 ஆண்டுகளாகக் கான்பூர் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து பணியாற்றி வந்தவர். திருமணமாகி அவருக்கு 4 மகள்கள் உள்ள நிலையில், ஏற்கனவே 3 மகளுக்கு திருமணமாகி விட்டது.
நீரிழிவு நோயாளியான மாணிக் குப்தா, உள்ளூர் போட்டிகளில் நடுவராக இருந்து கிடைக்கும் போட்டிக் கட்டணத்தைக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்தி வந்ததாகவும், அவரின் குடும்பத்திற்கு கருணை தொகை வழங்கப்படும் என KCA பொது மேலாளர் தினேஷ் கட்டியார் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |