நெருக்கடியான நேரத்தில் இராணுவ மோதல் வேண்டாம்! இந்தியா, பாகிஸ்தானுக்கு கூறிய ஐ.நா
ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகரித்து வரும் போர் பதற்றம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.
இரு நாடுகளின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடத்தியது. இதில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இராணுவம் தீர்வாக அமையாது
இதற்கு முன்பாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளின் உறவுகளும் கொதிப்பாக உள்ளதை பார்த்து நான் வேதனைப்படுகிறேன்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் நீதிமன்றத்திற்கு வர வேண்டும்" என தெரிவித்தார்.
மேலும் அவர், "இந்த நெருக்கடியான நேரத்தில் இராணுவ மோதலைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இது நிலைமையை எளிதில் கட்டுப்பாட்டை மீறி செல்ல வைக்கும். எந்தவொரு பிரச்சனைக்கும் இராணுவம் தீர்வாக அமையாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |