உக்ரைன் போரால் அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை: எச்சரிக்கை விடுக்கும் ஐ. நா சபை
ரஷ்யாவின் தீவிரமான தாக்குதலால் உக்ரைன் நாட்டை விட்டு பொதுமக்கள் பெருமளவு வெளியேறி வருகின்றனர், இதனால் அண்டை நாடுகளில் அகதிகளின் நெருக்கடி அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் கிளிவ்வை நோக்கி தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வருவதால் 3 மில்லியன் மக்கள்தொகை கொண்ட அந்த நகரில் இருந்து சுமார் 1.6 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெற தொடங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படையெடுப்பால் உக்ரைனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் தடைபட்டு பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ukrainians are waiting for the train to Poland pic.twitter.com/uPQPKPP6OF
— Tanya Kozyreva (@TanyaKozyreva) February 26, 2022
இந்தநிலையில் ரஷ்யாவின் இந்த போரால் சுமார் 5 மில்லியன் மக்கள் உக்ரைன் நாட்டைவிட்டு வெளியேறக்கூடும் என அஞ்சுவதாகவும், இதுவரை 3,86,000 பொதுமக்கள் உக்ரைன் நாட்டைவிட்டு வெளியேறி இருப்பதாகவும் உக்ரைன் நாட்டு அதிகாரிகள் அளித்த தரவுகளை சுட்டிக்காட்டி ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, போலந்து நாட்டிற்கு மட்டும் 1 முதல் 3 மில்லியன் அகதிகள் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், மற்ற நாடுகளையும் சேர்த்தால் 1 முதல் 5 மில்லியன் மக்கள் வரை உக்ரைனை விட்டு வெளியேறி பிறநாடுகளில் அகதிகளாக செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டைவிட்டு வெளியேறும் மக்கள், அகதிகளாக மால்டோவா, ருமேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு ரயில்கள் மூலமாகவும், கார்கள் மூலமாகவும், சிலர் நடந்தே கூட வந்தடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் அவ்வாறு அகதிகளாக வெளியேறும் உக்ரைன் மக்களால் அண்டை நாடுகளில் அகதிகளின் நெருக்கடி அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது.
உக்ரைனில் ராணுவ சட்டம் அமல்படுத்தபட்டு 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் கட்டாயமாக ராணுவ சேவை புரியவேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால் நாட்டை விட்டு வெளியேறும் மக்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறிப்பிடத்தக்கது.