அடங்க மறுக்கும் ரஷ்யா! ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்கம்... முக்கிய தகவல்
உக்ரைனில் போர் சண்டை தொடர்ந்து நடக்கும் நிலையில் அதன் எதிரொலியாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பிப்ரவரி 24-ம் திகதி தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைனின் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
புச்சா நகர வீதிகளில், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஏராளமான சடலங்கள் கிடந்த. இதன் வீடியோ வெளியாகி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரஷ்ய படைகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டை ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்க வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
இதையும் படிங்க: உக்ரைனில் 14 வயது சிறுமி கர்ப்பம்! 5 ரஷ்ய வீரர்களை அம்பலப்படுத்திய பெண் எம்.பி
இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 24 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா உள்ளிட்ட 58 நாடுகள் வாக்களிக்கவில்லை. 3-ல் 2 பங்கு வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக பதிவானதை தொடர்ந்து மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் நன்றி தெரிவித்துள்ளது.
இடைநீக்கம் வருத்தமளிப்பதாக கூறியுள்ள ரஷ்யா, இதனை எதிர்த்து சட்டபூர்வமாகப் போராடுவோம் என தெரிவித்துள்ளது.