ஒவ்வொரு மூன்று நாளும்... கனேடிய மாகாணம் ஒன்றை உலுக்கும் சிறார்கள் மரணம்
கனடாவின் ஒன்ராறியோ மாகாண காப்பக நிர்வாகத்தின் குளறுபடிகளால் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் சிறார் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அடிப்படையான கடமைகளில் இருந்து
மாகாண நிர்வாகம் பதிவு செய்திருந்த தரவுகளில் இருந்தே குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. கடந்த 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 354 சிறார்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் கீழில் செயல்படும் காப்பகங்களில் வசிக்கும் போதே சிறார்கள் மரணமடைந்துள்ளனர். மட்டுமின்றி சிறார்கள் மரணமடைந்த 12 மாதங்களில் விசாரணையும் முடித்துவைக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல், அரசாங்கம் அதன் அடிப்படையான கடமைகளில் இருந்து தவறியதாகவே சமூக ஆர்வலர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கைகளில், சிறார்களின் இறப்பு, அதற்கான காரணம், வயது உள்ளிட்ட மொத்த தரவுகளும் பதிவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போது மூன்று ஆண்டுகளுக்கான தரவுகள் மட்டுமே வெளியாகியுள்ளது. 2020ல் காப்பகம் தொடர்பாக 104 சிறார்கள் மரணமடைந்துள்ளனர். 2021ல் இந்த எண்ணிக்கை 129 என அதிகரித்துள்ளது. 2022ல் மொத்தம் 121 மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 118 சிறார்கள் மரணமடைந்துள்ளனர். அதாவது ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் சிறார் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மரணத்திற்கான மிகப்பெரிய காரணம்
இந்த நிலையில், சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒன்ராறியோவின் சட்டத்தரணியாக சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள Irwin Elman தெரிவிக்கையில், மாகாணத்தில் உள்ள காப்பகங்களில் உண்மையில் எத்தனை சிறார்கள் மரணமடைந்துள்ளனர் என்பதை கணக்கெடுப்பது என்பது கடினமான விடயம் என்றார்.
2020ல் காப்பகத்தில் இருக்கும் போது 13 சிறார்கள் மரணமடைந்துள்ளனர். ஆனால் 28 சிறார்கள் அவர்களுக்கான அரசு உதவிகள் ரத்து செய்யப்பட்ட 12 மாதங்களில் மரணமடைந்துள்ளனர். இதில் 34 சிறார்கள் அவர்களின் குடும்பத்தினருடன் தங்கியிருக்கும் போது இறந்துள்ளனர்.
குறித்த சிறார்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் வழங்கப்பட்டும் வந்துள்ளது. மூன்று வருடங்களிலும் சிறார்களின் மரணத்திற்கான மிகப்பெரிய காரணம் தீர்மானிக்கப்படாததாக பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் மூன்று வருடங்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு இறப்புகள் உறுதி செய்யப்படவில்லை. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மூன்றாண்டுகளில் 354 சிறார்கள் என்பது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்றே சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |