போரில் வெடிக்காத குண்டுகள் அகற்றும் ஈரானிய வீரர்கள்: எதிர்பாராத வெடிப்பில் 14 பேர் உயிரிழப்பு
போரில் வெடிக்காத குண்டுகளை அகற்றும் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 14 ஈரான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் -அமெரிக்கா போர்
கடந்த பிப்ரவரி 28ம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் மீது இராணுவ தாக்குதலை தொடங்கினர்.
இதற்கு பதிலடியாக ஈரானியப் படைகளும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து ஏப்ரல் 8ம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலில் கொண்டு வரப்பட்டது.
தாக்குதல்களை இரண்டு தரப்பினரும் தற்போது நிறுத்தி இருந்தாலும், அமெரிக்க படைகளால் வீசப்பட்டு வெடிக்காமல் நிலத்தில் புதைந்துள்ள குண்டுகள் ஈரானுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை மட்டும் கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகளை ஈரானிய படையினர் செயலிழக்க செய்துள்ளனர்.
14 ஈரானிய வீரர்கள் உயிரிழப்பு
இந்நிலையில் அமெரிக்காவுடனான போர் நடவடிக்கையில் வெடிக்காமல் எஞ்சியிருந்த குண்டுகளை அகற்றும் பணியில் ஈரானிய வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட எதிர்பாராத குண்டுவெடிப்பில் 14 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஈரானின் ஜான்ஜன் நகருக்கு அருகில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் வீசிய கிளஸ்டர் குண்டுகள் மற்றும் வெடிக்காத பிற குண்டுகளை அகற்றும் பணியில் ஈரானிய படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நிகழ்ந்த எதிர்பாராத குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |