நன்றிகெட்டவர்கள்... கோபத்தில் சீறிய ட்ரம்ப்: நன்றி சொன்ன ஜெலென்ஸ்கி
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஜெனீவாவில் முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
மதிப்பளிக்கவில்லை
உக்ரைன் மீது பொதுவாகவே ஒரு இடைவெளியை பராமரித்துவரும் ட்ரம்ப், வாய்ப்பு அமையும் போதெல்லாம் கடுமையாக விமர்சித்தும் வந்துள்ளார்.

2024 தேர்தலில் வெற்றி பெற்றதும் 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டுவருவதாக தேர்தல் பரப்புரைகளில் பேசி வந்த ட்ரம்பால் தற்போது ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் கடந்தும் உக்ரைன் போருக்கு முறையான தீர்வை எட்ட முடியாமல் தடுமாறி வருகிறார்.
ஏற்கனவே ரஷ்ய ஆதரவு நிலையில் இருக்கும் ட்ரம்பால், இரு நாடுகளுக்கும் பொதுவான ஒரு தீர்வுக்கு வர முடியவில்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மட்டுமின்றி, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, உக்ரைன் அதிகாரிகளை உட்படுத்தாமல், ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து உருவாக்கியுள்ள 28 அம்ச ஒப்பந்தம் ஐரோப்பியா உள்ளிட்ட உலக நாடுகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மட்டுமின்றி, அது ரஷ்யாவிடம் உக்ரைனை சரணடைய வைக்கும் சூழ்ச்சி என்றும், மொத்த ஐரோப்பியாவிற்கும் பின்னாளில் ஆபத்தாக முடியும் சூழல் ஏற்படலாம் என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்கா உடனான நட்புறவை இழக்கும் நிலை ஏற்படலாம் என உக்ரைன் ஜனாதிபதி தமது நாட்டு மக்களிடம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அந்த 28 அம்ச ஒப்பந்தம் இறுதி முடிவல்ல என அறிவிக்கும் நெருக்கடிக்கு ட்ரம்ப் தள்ளப்பட்டார். வியாழக்கிழமைக்குள் ஜெலென்ஸ்கி அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டும், அல்லது மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்த நிலையிலேயே, ஐரோப்பிய தலைவர்களின் தலையீட்டால், தற்போது ஜெனீவாவில் முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
விளாடிமிர் புடினுக்கு சாதகமான ஒப்பந்தம் அதுவென விமர்சிக்கப்படுவதாலும், உக்ரைன் அந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுப்பதாலும் ட்ரம்ப் மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்.
உதவிகளுக்கு நன்றி
தமது Truth சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், உக்ரைன் நிர்வாகம் எங்கள் முயற்சிகளுக்கு மதிப்பளிக்கவில்லை என சீறியுள்ளார். ரஷ்யாவின் விருப்பப்பட்டியல் என உலக நாடுகளால் விமர்சிக்கப்படுவது குறித்து ட்ரம்ப் விளக்கமளிக்கவும் மறுத்துள்ளார்.

ட்ரம்பின் இந்த பதிவை அடுத்து சில மணி நேரங்களில், ஜெலென்ஸ்கி தமது சமூக ஊடக பக்கத்தில், உக்ரைன் அமெரிக்காவிற்கும், ஒவ்வொரு அமெரிக்க மக்களுக்கும், தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி ட்ரம்பிற்கும், அவரது அளப்பரிய உதவிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, ஜெனீவாவில், அமெரிக்கா மற்றும் உக்ரைன் உயர் அதிகாரிகள் குழு, அந்த 28 அம்ச வரைவுத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், உக்ரைன் முன்வைத்துள்ள சில கோரிக்கைகள் புதிய வடிவத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க முன்பு வெளியிட்டுள்ள ஒப்பந்தத்தில், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு சொந்தம் என்றும், உக்ரைன் இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்றும், நேட்டோ அமைப்பில் இனி எந்த காலத்திலும் உக்ரைனுக்கு இடமில்லை என்றும்,
ரஷ்யாவின் முடக்கப்பட்ட பணத்தில் உக்ரைனுக்கு 100 பில்லியன் யூரோ அளிக்கப்படும் என்றும், ஆனால் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனை மறுகட்டமைக்க அமெரிக்கா மட்டுமே களமிறங்கும் என்பதால், அதில் பெருந்தொகை ட்ரம்பிடம் ஒப்படைக்கும் நிலை வரும் என்றும் கூறப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |