இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்படும் Universal Basic Income: சில முக்கிய தகவல்கள்
இங்கிலாந்தில் வாழும் 30 பேர், universal basic income (UBI) என்ற திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு, மாதம் ஒன்றிற்கு 1,600 டொலர்கள் வீதம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
Universal basic income (UBI) திட்டம் என்பது என்ன?
அனைவருக்கும் அடிப்படை வருமானம் அல்லது கட்டுகளற்ற அடிப்படை வருமானம் என்னும் இந்த universal basic income என்பது, ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், அவர்களது வறுமை நிலை பற்றி கருத்தில் கொள்ளாது, எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி அரசு அல்லது அரசுத்துறை நிறுவனம் மூலம் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு நிதியாகும்.
விடயம் என்னவென்றால், இந்த நிதி பெறுவோருக்கு இதனைத் தவிர வேறு வருமானம் இருந்தாலும் பிரச்சினையில்லை.
இந்த நிதி, தனி நபர்களுக்கு வழங்கப்படும் நிதி, வீடுகளுக்கு அல்ல. அத்துடன், ஒரே தவணையாக கொடுக்கப்படும் தொகையும் அல்ல, பல தவணைகளில் அது கொடுக்கப்படும்.
மேலும், வவுச்சர்கள், உணவு அல்லது சேவைகளாக வழங்கப்படாமல், இந்த உதவி, ரொக்கப்பணமாக சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
இங்கிலாந்தில் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்படும் universal basic income திட்டம் உலக நாடுகள் சிலவற்றில் சோதனை செய்து பார்க்கப்பட்டுவரும் இந்த universal basic income திட்டம், தற்போது, இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இங்கிலாந்திலுள்ள சில குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் 1,600 பவுண்டுகள் வீதம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
@dreamstime
இந்த திட்டத்தை நடத்துவது யார்?
இந்த universal basic income திட்டத்தை Autonomy என்னும் ஆய்வமைப்பு நடத்த, தொண்டு நிறுவனமான Big Local மற்றும் Northumbria பல்கலைக்கழகம் ஆகியவை அதற்கு ஆதரவளிக்கின்றன.
என்ன விடயங்கள் கண்காணிக்கப்பட உள்ளன?
ஆய்வமைப்பு, நிதியுதவி பெறும் 30 பேரை கண்காணிக்கும் அதே நேரத்தில், நிதியுதவி பெறாத ஒரு கூட்டத்தையும் கண்காணிக்கும்.
அது, நிதி பெறுவோரின் அனுபவத்தையும், நிதி பெறாத கூட்டத்தின் அனுபவத்தையும் ஒப்பிட்டு நோக்கும்.
பணம், அதைப் பெறுவோரின் வாழ்வில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அவர்களுடைய வாழ்வு மற்றும் மன நலனை அது எவ்விதம் பாதிக்கிறது என்றும், பணம் பெறுபவர்கள் வேலைக்குச் செல்ல விரும்புகிறார்களா இல்லையா என்பதும் கவனிக்கப்படும்.
ஆதரவும் எதிர்ப்பும்
இந்த universal basic income என்ற திட்டம், நலத்திட்டங்களை எளிதாக்கும் என்று கூறும் அதன் ஆதரவாளர்கள், அது வறுமையை எதிர்கொள்ள உதவும் என்கிறார்கள்.
ஆனால், அதை எதிர்ப்பவர்களோ, அது மிகவும் அதிக செலவு பிடிக்கும் விடயம், வயது வந்த ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றிற்கு 1,600 பவுண்டுகள் வழங்குவது எளிதான விடயம் அல்ல என்கிறார்கள்.
இதற்கிடையில், வேல்ஸ் நாட்டிலும் இத்தகைய universal basic income திட்டம் ஒன்று சோதனை முறையில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.