மருத்துவர் ஒருவரால் 200 மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்: இறுதியில் ஒப்புக்கொண்ட பல்கலைக்கழகம்
மகப்பேறு மருத்துவர் ஒருவரால் துஸ்பிரயோகத்திற்கு இலக்கான மாணவிகள் 200 பேர்களுக்கு இழப்பீடு வழங்க கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் வளாகத்தில் மகப்பேறு மருத்துவராக செயல்பட்டு வந்தவர் மருத்துவர் ஜேம்ஸ் ஹீப்ஸ். இவரது சிகிச்சையை நாடிய சுமார் 200 மாணவிகளை இவர் மிரட்டி, துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளார்.
ஆனால் குறித்த மருத்துவர் தொடர்பில் பல பெண்கள் புகாரளித்தும் வேண்டுமென்றே நடவடிக்கையை தாமதப்படுத்தி வந்துள்ளது தொடர்புடைய லாஸ் ஏஞ்சல்ஸ் வளாக நிர்வாகம்.
1983 முதல் 2018 வரையான காலகட்டத்தில் குறித்த மருத்துவரின் துஸ்பிரயோகத்திற்கு இலக்கான பல பெண்கள் தொடர்ந்து புகாரளித்து வந்துள்ளணர். இந்த நிலையில் 2017ல் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு ஒப்புக்கொண்டுள்ளது கலிபோர்னியா பல்கலைக்கழகம்.
தொடர்ந்து 2019ல் மருத்துவர் ஹீப்ஸின் உரிமம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி அளிப்பதால் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதாலவும் அமையும் என பலகலைக்கழக நிர்வாகம் முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து 250 மில்லியன் டொலர் தொகையை ஒதுக்கியுள்ள பல்கலைக்கழகம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடாக அளிக்க முன்வந்துள்ளது. இருப்பினும், நிதியுதவி அளிப்பதால் மட்டும் 300 பெண்களுக்கும் மேலானோர் அளித்த புகாரில் விசாரணை நிறுத்தப்படாது என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 40 ஆண்டு காலம் பணியாற்றிய ஒரு விளையாட்டு மருத்துவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் 490 மில்லியன் டொலர் இழப்பீடாக அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.