இஸ்ரேலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... ஆபத்தான நிலையில் 53 பச்சிளம் குழந்தைகள்
இஸ்ரேலிய சிறார் காப்பகம் ஒன்றில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகள் மரணமடைந்துள்ள நிலையில், 53 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பச்சிளம் குழந்தைகள்
திங்கட்கிழமை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு பெண் குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சுமார் ஆறு மாத வயதுடைய ஆண் குழந்தை ஒன்று அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இறப்புக்கான காரணத்தை மருத்துவர்கள் குறிப்பிடவில்லை. முன்னதாக இஸ்ரேலின் மேகன் டேவிட் அடோம் அவசர மருத்துவ சேவை, 55 பச்சிளம் குழந்தைகளை அவசர சிகிச்சைக்காக நகர மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர், இதில் இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறினார்.
இந்த நிலையிலேயே, சிறார்கள் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகவும், 53 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அபாயகரமான பொருட்கள்
சம்பவத்தின்போது அந்த காப்பகத்தில் பணியில் இருந்த 3 ஊழியர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஜெருசலேமில் அமைந்துள்ள இந்த காப்பகம் உரிமம் இல்லாமல் இயங்குவதாகவும், இந்த சம்பவம் அதன் வெப்பமாக்கல் அமைப்புடன் தொடர்புடையதா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிர ஆர்த்தடாக்ஸ் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. கட்டிடத்தில் தீ விபத்துக்கான அறிகுறிகளோ அல்லது வேறு எந்தவிதமான சேதங்களோ காணப்படவில்லை.
இந்தச் சம்பவத்தில் அபாயகரமான பொருட்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தாலும், பின்னர் அந்த சாத்தியக்கூற்றை நிராகரித்துவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |