மதுபோதையில் மணமகன் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! ரூ.7 லட்சம் இழப்பீடு
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் மணமகன் மதுபோதையில் வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
மதுபோதையில் திருமண ஊர்வலம்
உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் அமித் ராணா என்பவருக்கும், ஷாஷி (19) என்ற இளம்பெண்ணிற்கும் 18ஆம் திகதி திருமணம் நடைபெற இருந்தது.
முந்தைய நாள் இரவு மணமகளின் வீட்டிற்கு மணமகன் வீட்டார் இசைக்குழு, உறவினர்களுடன் திருமண ஊர்வலம் சென்றனர்.
அப்போது மணமகன் அமித் மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மணமகள் அவரை திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்துள்ளார்.
உடனே அவர் தனது நண்பர்கள் தனக்கு தெரியாமல் மதுவை கலந்து கொடுத்ததாக கூறினார். பின்னர் ஷாஷியை சமாதானப்படுத்த இருவீட்டாரும் முயன்றுள்ளனர்.
ஆனால் அவரோ "திருமணத்தில் கூட மது அருந்தாமல் இருக்க முடியாத குடிகாரரை நான் திருமணம் செய்துகொள்ள முடியாது" என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
திருமணம் நிறுத்தம்
இதனைத் தொடர்ந்து, திருமண ஊர்வலத்தில் வந்த அனைவருமே மதுபோதையில் இருந்ததாகவும், இதன்மூலம் மணமகன் அமித் தனக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மதுவை கலந்ததாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் மணப்பெண் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதன் காரணமாக பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதில் மணமகளின் குடும்பத்தினர் திருமணச் செலவுகளுக்கு பணத்தைத் திருப்பித் தருமாறு கோரியுள்ளனர். ஆனால், மணமகனின் தரப்பு பணம் கொடுக்க மறுத்துவிட்டது.
இதனால் இரு தரப்பினரும் காவல்துறையின் உதவியை நாடினர். அப்போது பொலிஸார் மணமகன் அமித்தையும், அவரது உறவினர்களில் ஒருவரையும் காவலில் எடுத்தனர். மேலும், மணமகளின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்கவும் அமித் தரப்பு ஒப்புக்கொண்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |