ஒன்லைன் விளையாட்டில் தந்தையின் பணத்தை இழந்த சிறுவன் எடுத்த துயர முடிவு
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், தன் தந்தையின் பணத்தை பயன்படுத்தி ஒன்லைன் விளையாட்டொன்றை விளையாடியுள்ளான்.
துரதிர்ஷ்டவசமாக, அவன் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்ச ரூபாயை இழந்துள்ளான்.
பணம் மாயமானதாக புகார்
உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோவில் வாழ்ந்துவரும் பெயிண்டர் ஒருவர், நிலம் ஒன்றை விற்று தனது வங்கிக்கணக்கில் 13 லட்ச ரூபாயை போட்டுவைத்துள்ளார்.
அந்தப் பணம் திடீரென மாயமாகவே, அவர் வங்கிக்குச் சென்று வங்கி மேலாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.
வீட்டுக்கு வந்த அவர் தன் குடும்பத்தினரிடம் பணம் மாயமான விடயம் குறித்து விவரித்ததுடன், தான் வங்கி மேலாளரிடம் புகார் கொடுத்துள்ளது குறித்தும் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், அவரது மகனான 13 வயதுச் சிறுவன்தான் தந்தையின் பணம் சுமார் 14 லட்ச ரூபாயை ஒன்லைன் விளையாட்டு ஒன்றில் இழந்துள்ளான்.
வங்கிக்கணக்கிலிருந்து பணம் மாயமானது தந்தைக்குத் தெரிந்துவிட்டதை அறிந்த அவன், தன் அறைக்குச் சென்று படிக்கப்போவதாக கூறியுள்ளான்.
சிறிது நேரத்துக்குப் பின் அவனது தங்கை அந்த அறைக்குச் செல்ல, அங்கு அவன் தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒன்லைன் விளையாட்டால் இப்படி பல உயிர்கள் பறிபோய்க்கொண்டிருக்கும் நிலையிலும், அதன் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.
இதே லக்னோவில் கடந்த மாதமும் ஒரு 18 வயதுப் பையன் தான் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகிவிட்டதாகவும், அதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்படுவதாகவும், தன்னால் தனது குடும்பத்துக்கு பணப் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் தான் உயிரை மாய்த்துக்கொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |