மதுபோதையில் வாகனம் ஓட்டிய அமெரிக்க ராணுவ வீரர் ஜப்பானில் கைது
US Air Force officer Arrested in Japan Okinawa: போதையில் வாகனம் ஓட்டிய அமெரிக்க விமானப்படை கேப்டன் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவ வீரர் ஜப்பானில் கைது
சனிக்கிழமை காலை ஜப்பானின் ஒகினாவா தீவில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய அமெரிக்க விமானப்படை கேப்டன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர் உள்ளூரில் உள்ள Kadena விமானப் படை தளத்தில் பணியாற்றி வருவதாக ஜப்பானின் செய்தி நிறுவனமான Kyodo News தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை ஒகினாவா மாகாண காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் இது தொடர்பான கருத்தை கேட்க சம்பந்தப்பட்ட விமானப் படைத் தள அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் ஒகினாவா தீவில் அமெரிக்க ராணுவ வீரர்களால் நடைபெறும் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா - ஜப்பான் இடையே புதிய விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டது.
அதில் கீழ்நிலை வீரர்களுக்கு டிசம்பர் 7ம் திகதி வரை கடுமையான ஊரடங்கு விதிக்கப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமை அறிவித்து இருந்தது.
அத்துடன் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை வீரர்கள் யாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட இருப்பிடங்களை தவிர வெளி இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நேரத்தில் அமெரிக்க விமானப்படை கேப்டன் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க விமானப்படை கேப்டன், இந்த ஊரடங்கு விதிகளை மீறியுள்ளாரா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று ஒகினாவா காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 54,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஜப்பானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.