முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள்
ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக அதிரடியாக கடற்படை முற்றுகையை அமெரிக்கா அறிவித்த நிலையில், முதல் நாளிலேயே மூன்று ஈரான் எண்ணெய் கப்பல்கள் உட்பட 8 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நிச்சயமற்ற தன்மை
இஸ்லாமாபாத்தில் வார இறுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமையன்று முற்றுகையை அறிவித்தார்.

ட்ரம்பின் இந்த முற்றுகை அறிவிப்பானது சரக்கு அனுப்புவோர், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் போர் அபாயக் காப்பீட்டாளர்களுக்கு மேலும் அதிக நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய போருக்கு முன்னதாக, நாளொன்றுக்கு 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்துள்ளதை ஒப்பிடுகையில், தற்போதைய போக்குவரத்து அளவு அதன் ஒரு சிறு பகுதியாக மட்டுமே உள்ளது.
இந்த நிலையில், முதல் 24 மணி நேரத்தில், அமெரிக்கத் தடையைத் தாண்டி எந்தக் கப்பல்களும் செல்லவில்லை என்று அமெரிக்க மத்தியக் கட்டளைப் பீடம் தங்களது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஆறு கப்பல்கள், ஈரானியத் துறைமுகம் ஒன்றிற்குள் மீண்டும் நுழைவதற்காகத் திரும்பிச் செல்லுமாறு அமெரிக்கப் படைகள் விடுத்த அறிவுறுத்தலுக்கு இணங்கின என்றும் பதிவு செய்துள்ளது.
பாதிக்கப்படவும் இல்லை
ஆனால் வெளியான தரவுகளின் அடிப்படையில், நீரிணை வழியாகச் சென்ற, ஈரானுடன் தொடர்புடைய மூன்று கப்பல்களும் ஈரானியத் துறைமுகங்களை நோக்கிச் செல்லவில்லை என்றும், அவை ட்ரம்பின் முற்றுகையால் பாதிக்கப்படவும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்காவின் தடை விதிப்பில் சிக்கியுள்ள இரண்டு கப்பல்களும் ட்ரம்பின் முற்றுகையை முறியடித்து, ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளது.
முன்னதாக ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவது ஆபத்தானதும் பொறுப்பற்றதும் ஆகும் என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேலும், இது பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் அமைச்சகம் எச்சரித்தது. சீனக் கப்பல்கள் அந்த நீரிணை வழியாகச் சென்றனவா என்பது குறித்து அமைச்சகம் எதையும் குறிப்பிடவில்லை.
ட்ரம்பின் முற்றுகைத் தொடங்கியதில் இருந்து மேலும் 5 கப்பல்கள் நீரிணையைக் கடந்துள்ளது. ஆனால் மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கும் கப்பல்களுக்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்க இராணுவம் அறிவித்திருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |