சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கா, கனடா, பிரித்தானியா குடிமக்களுக்கு எச்சரிக்கை
Attack On Riyadh Airport: ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்.
ரியாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விலகி இருக்குமாறு சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் நாட்டு குடிமக்களை எச்சரித்துள்ளன.
பாதுகாப்பு அறிவுறுத்தல்
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாலும், விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், தங்கள் நாட்டு மக்களை விமான நிலையத்தைத் தவிர்க்கவும், உள்ளூர் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளன.
ஸ்பெயின் தூதரகம், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தங்களது செய்தியில், விமான நிலையத்தின் மீது ஹவுதிகள் நடத்திய இன்னொரு தாக்குதலின் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், முன்னதாக அங்கு மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டதாக பல பேர்கள் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளது.
ஹவுதிகள் ஏவுகணை மூலம் விமான நிலையத்தைத் தாக்கியதாக, ஸ்பெயின் தூதரக வட்டாரம் ஒன்று AFP-யிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று நடந்த புதிய தாக்குதல் அல்லது வெளியேற்றம் குறித்து சவுதி அதிகாரிகள் முதலில் எந்த உறுதிப்படுத்தலையும் செய்யவில்லை; சில மணிநேரங்கள் கழித்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து செய்தி வந்த பின்னரே அவர்கள் உறுதிப்படுத்தினர்.
நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து வசதிகளைக் குறிவைத்து தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களுக்கு மத்தியில், 2026 அக்டோபர் 10, சனிக்கிழமை பிற்பகல் ரியாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர், அவர்களின் எண்ணிக்கை இன்னும் மதிப்பிடப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, விமான நிலையம் மீதான தாக்குதலை அடுத்து காயமடைந்த ஐந்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் மருத்துவமனை வட்டாரம் ஒன்று AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, இந்தத் தாக்குதலைக் குறிப்பிட்டு, ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அனைத்து அமெரிக்கக் குடிமக்களும் இந்த விமான நிலையத்தையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் தவிர்க்குமாறு கடுமையாகப் பரிந்துரைப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஒரு வாரம் வரை
கிங் காலித் சர்வதேச விமான நிலையம் பாதுகாப்பானதாக மாறும் வரை அங்கு செல்வதைத் தவிர்க்குமாறும், சவுதி அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனிக்குமாறும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் தனது குடிமக்களை வலியுறுத்தியது.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒரு வாரம் வரை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று பல தூதரகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி வருவதாக ஒரு மேற்கத்திய தூதர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கனடா மற்றும் ஜேர்மன் தூதரகங்களும் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹவுதிகளின் சமீபகாலத் தாக்குதல்கள் காரணமாக, சவுதி அரேபியாவில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரான்ஸ் தூதரகம் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளைப் புகைப்படம் எடுக்கவோ அல்லது இணையத்தில் பகிரவோ கூடாது என்றும் அதிகாரிகள் தரப்பு பிரெஞ்சு குடிமக்களை எச்சரித்துள்ளது.
சவுதி அரேபியா சமீப வாரங்களாகத் தன் மண்ணில் நடக்கும் ஹவுதி தாக்குதல்கள் குறித்த பொதுத் தகவல்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்தி வருவதால், ஊடகங்களுக்கும் மக்களுக்கும் ஆபத்து என்னவென்பது குறித்துத் தெளிவில்லாமல் இருக்கிறது.
வியாழக்கிழமையன்று ரியாத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்றுள்ளனர். அமெரிக்காவும் அதன் நட்பு நாடான இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக அணிவகுத்து நிற்கும் மத்திய கிழக்கு போரில், ஹவுதிகள் ஒரு புதிய முனையைத் திறந்துள்ளனர்.