பேச்சைக் குறைங்க...ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பில் ட்ரம்பின் தூதர் கடுகடுப்பு
உக்ரைனில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க தூதருடனான சந்திப்பின் முடிவில், பத்திரிகையாளர் சத்திப்பு கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூதரக உறவுகள்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சர்வாதிகாரி என டொனால்டு ட்ரம்ப் அடையாளப்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகள் நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் Keith Kellogg என்பவரை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேரிடையாக சந்தித்துள்ளார்.
ஆனால் அதைத் தொடர்ந்து நடைபெறவிருந்த அவர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதாக ஜெலென்ஸ்கியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் விருப்பத்திற்கு இணங்க இந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த காரணத்தையும் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி நிகிஃபோரோவ் குறிப்பிடவும் இல்லை.
ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையேயான திடீரென்று எழுந்த பகை அவர்களின் தனிப்பட்ட உறவுகளை பாதித்துள்ள நிலையிலேயே கெல்லாக் உக்ரைன் தலைநகருக்கு பயணப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி, எதிர்காலத்தில் உக்ரைனின் போர் முயற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு என்பது கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. போர் முடிவுக்கு வராத நிலையில், தேர்தலை முன்னெடுக்க டொனால்டு ட்ரம்ப் கட்டாயப்படுத்தியதை ஜெலென்ஸ்கி மறுத்துள்ளதை அடுத்தே பிரச்சனை உருவானது.
ஜெலென்ஸ்கி பிடிவாதம்
மேலும், தமது சமூக ஊடக பக்கத்தில், மிகவும் மலிவான வார்த்தைகளால் ஜெலென்ஸ்கியை டொனால்டு ட்ரம்ப் விமர்சித்திருந்தார். அத்துடன், மிக விரைவில் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க தவறினால் உக்ரைன் மிஞ்சாது என்றும் மிரட்டல் விடுத்தார்.
மேலும், தோல்வியில் முடியப்போகும் ஒரு போருக்காக அமெரிக்கா 350 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். ரஷ்யா அமைதி திரும்ப வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், ஆனால் ஜெலென்ஸ்கி பிடிவாதமாக இருக்கிறார் என்றும் ட்ரம்ப் பழி சுமத்தினார்.
இந்த நிலையிலேயே ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்துள்ள கெல்லாக், பேச்சைக் குறையுங்கள் என ஜெலென்ஸ்கியை மிரட்டியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஜெலென்ஸ்கி ஒரு ஒப்பந்தத்திற்கு இணங்க வேண்டும் என்றும், ட்ரம்பை விமர்சிப்பதை கைவிட வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை மிரட்டல் விடுத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |