சென்னையில் தயாரிக்கப்படும் கண் சொட்டுமருந்தால் அமெரிக்காவில் 3 பேர் மரணம்: CDC எச்சரிக்கை
தமிழகத்தில் உள்ள நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கண் சொட்டுமருந்தால் பலர் தொற்றுநோய்க்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளதாக, அதனை பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை அமெரிக்காவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக மருந்து ஒழுங்குமுறை ஆணையம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்திய தயாரிப்பு மருந்து
இந்தியாவில், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள குளோபல் பார்மா ஆலையை ஆய்வு செய்து அமெரிக்காவின் உயர்மட்ட கட்டுப்பாட்டாளரான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கடந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
EzriCare Artificial Tears மற்றும் Delsam Pharma's Artificial Tears ஆகிய இரண்டு பிராண்ட் பெயர்களில் இந்தியாவில் Global Pharma தயாரித்து, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கண் சொட்டு மருந்துகள் Pseudomonas aeruginosa நோய்த்தொற்று பரவலுக்கு தொடர்புடையது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது
EzriCare
FDA-வின் பரிந்துரைக்குப் பிறகு மருந்து நிறுவனம் பிப்ரவரியில் சொட்டுகளை திரும்பப் பெற்றது. அதன் தயாரிப்புகளின் இறக்குமதியையும் FDA நிறுத்தியது.
3 பேர் மரணம், 8 பேர் கண்பார்வை இழப்பு
அமெரிக்காவில் இந்த கண் சொட்டு மருந்தால் 3 பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் பலர் சூடோமோனாஸ் ஏருகினோசா (Pseudomonas aeruginosa) கடுமையான நோய்த்தொற்ரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் குறைந்தது 8 பேருக்கு கண்பார்வை பறிபோனதாகவும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது.
இந்த கண் சொட்டு மருந்தின் இந்திய உற்பத்தியாளர் பல பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) இந்த மருந்தை பயன்படுத்துவது குறித்து அமெரிக்க குடிமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Getty Images
தமிழக மருந்து ஒழுங்குமுறை ஆணையம் மறுப்பு
இந்நிலையில், ஆர்டிஃபிஷியல் டியர்ஸில் பாக்டீரியாக்கள் இருப்பதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, கண் சொட்டுமருந்து மாதிரிகளில் “மாசு இல்லை” என்று தமிழக மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் பி.வி.விஜயலட்சுமி கூறுகையில், திறக்கப்படாத கண் சொட்டு மருந்துகளின் மாதிரிகள் பல தொகுதிகளிலிருந்து பகுப்பாய்வு செய்யப்பட்டன, மேலும் மாசு எதுவும் கண்டறியப்படவில்லை. கண் சொட்டு மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் தரம் வாய்ந்ததாக இருப்பது கண்டறியப்பட்டது என்று கூறினார்.
இருப்பினும், அமெரிக்காவின் சிடிசியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க தமிழ்நாடு மருந்து ஒழுங்குமுறை ஆணையம் மறுத்துவிட்டது.