அடுத்த 4 வாரங்களில் கொரோனா மரணம் அதிகரிக்கும்: அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை
அமெரிக்காவில் அடுத்த 4 வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும், பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான டெல்டா, உலகின் 130 நாடுகளுக்கு மேலாக பரவி உள்ளது.
இந்த டெல்டா வைரஸ், கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்த அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. அங்கு இந்த வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி உள்ளது. இது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், செப்டம்பர் 6-ஆம் திகதி வாக்கில் தினசரி 9,600 முதல் 33,300 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம்.
செப்டம்பர் 4-ஆம் திகதியுடன் முடியும் வாரத்தில் 3,300 முதல் 12,600 பேர் பலியாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், அமெரிக்காவின் தென்பகுதியில் இதுவரை இல்லாத வகையில் மருத்துவமனைகளில் சேர்க்கை அதிகரிக்கும். வழக்கமான பராமரிப்பு கூட கிடைக்காத நிலைக்கு கொரோனா நோயாளிகள் ஆளாகலாம்.
டெல்டா வைரசால் பல மாகாணங்கள் போராடி வருகின்றன. இதுதான் கொரோனா வைரஸ்களிலேயே மிக அதிகமாக பரவக்கூடியதாகும். மற்ற கொரோனா வைரஸ்களை விட இது இரு மடங்கு வேகமாக தொற்றக்கூடியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தகவல்கள்படி, இதுவரையில் 36,185,761 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 618,454 பேர் இறந்துள்ளனர்.
அமெரிக்க மக்கள் தொகையில் 50.1 சதவீதத்தினர், கொரோனாவுக்கு எதிராக இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.