ஓங்கும் ஹவுதிகளின் கை... அமெரிக்க தூதர்கள் சவுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல்
US diplomats told to leave Saudi Arabia: அமெரிக்க தூதர்கள் சவுதி அரேபியாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
சவுதி அரேபியாவில் பணியாற்றும் சில தூதர்களையும், அமெரிக்க அரசாங்க ஊழியர்களின் குடும்பத்தினரையும் அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னுரிமை
வளைகுடா நாடான சவுதி அரேபியா கிட்டத்தட்ட நாள்தோறும் தொடர் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்திடம் இருந்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

புதன்கிழமை மாலை விமான நிலையம் மற்றும் எண்ணெய் வயல் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் இருந்து ஹவுதிகளால், பொதுமக்களுக்கான விமான நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களே, சவுதி அரேபியாவின் தூதரகத்தில் அதிகாரிகள் குறைப்புக்கான காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் கூறுகையில், வெளிவிவகார அமைச்சகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலனே அமெரிக்காவின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும் என்றார்.
ரியாத்தில் உள்ள தங்களது தூதரகம் மற்றும் அதன் துணைத் தூதரகங்கள் இந்த உத்தரவின் கீழ் வருவதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் தொடக்கத்தில் ரியாத்தில் உள்ள தூதரகம் கடுமையாகச் சேதமடைந்திருந்தது; பல மாதங்களாக மிகக் குறைந்த பணியாளர்களைக் கொண்டே அது இயங்கி வந்தது, இருப்பினும் அண்மைய வாரங்களில் சில தூதர்கள் மீண்டும் அங்கு திரும்பியிருந்தனர்.
இதனிடையே, NBC மற்றும் AFP உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலில், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்தும் அமெரிக்க தூதரகப் பணியாளர்களின் குடும்பங்களும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான போரை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை ட்ரம்ப் நிர்வாகம் வகுத்து வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்ட நிலையிலேயே இந்தத் தகவலும் வெளியாகியுள்ளது.
மோசமானத் தாக்குதல்
ஆனால், புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்திய கிழக்கில் பல நாடுகளில் இருந்து தூதரக அதிகாரிகள் வெளியேறுவது குறித்த செய்திகள் தவறானவை என்று குறிப்பிட்ட டாமி பிகாட், சவுதி அரேபியாவிலிருந்து பணியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் மட்டுமே வெளியேற வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சகம் உத்தரவிட்டிருந்ததை வலியுறுத்திக் கூறினார்.

சவுதி அரேபியாவுக்கும் ஹவுதி குழுவினருக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக சவுதி அரேபியா ஹவுதிகளின் தொடர்ச்சியான மிக மோசமானத் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.
இதில் ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அடங்கும்; இது கடந்த பல ஆண்டுகளில் அந்த நாட்டில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதலாகும்.
இதனிடையே, பஹ்ரைன் மற்றும் கத்தாருக்கு அருகிலுள்ள வளைகுடாப் பகுதியில், தம்மாமில் அமைந்துள்ள மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சவுதி குடியிருப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக, புதன்கிழமை மாலை சவுதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.

அதிகாரிகளின் தகவல்படி, எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் விமான நிலையத்திற்கும் சில பொருள் சேதங்கள் ஏற்பட்டன. இந்தத் தாக்குதல்கள் எதற்கும் ஹவுதி அமைப்பினர் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை; இருப்பினும், சவுதி அரேபியா மீது அவர்கள் சமீபகாலமாக நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில், விமான நிலையங்களும் எண்ணெய் நிலையங்களும் அந்த அமைப்பின் முக்கிய இலக்குகளாக இருந்து வருகின்றன.
ஈரானுக்கு எதிரான போர் தொடங்குவதற்கு முன்னதாக, பிப்ரவரி மாத இறுதியில், வளைகுடாப் பகுதியிலிருந்து அவசியமற்ற தூதரகப் பணியாளர்கள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, NBC வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், அமெரிக்க இராணுவம் சமீப நாட்களாக மத்திய கிழக்கு முழுவதும் உள்ள தளங்களில் தனது இராணுவ இருப்பை ரகசியமாகக் குறைத்து வருகிறது என்றே குறிப்பிட்டுள்ளது. ஆனால், அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அதை உண்மைக்குப் புறம்பானது என மறுத்துள்ளார்.