இந்தியர்கள் உட்பட... ஆயிரக்கணக்கானோரை வேலை இழக்க வைக்கும் புதிய அமெரிக்க சட்டம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் தானியங்கி முறையில் நீட்டிப்பதை நிறுத்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஒரு இடைக்கால விதியை அறிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள்
இந்த நடவடிக்கையானது இந்தியா உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களைப் பாதிக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பணி அனுமதிகளை அக்டோபர் 30ம் திகதி அல்லது அதற்கு பின்னர் புதுப்பிக்க வேண்டி விண்ணப்பித்தால், தானாக புதுப்பித்தல் செல்லுபடியாகாது என்றும், அக்டோபர் 30ம் திகதிக்கு முன்னர் புதுப்பித்தவர்களுக்கு சிக்கல் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், புதிய விதியின் மூலம், பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அதிக சோதனை மற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, வேலை அனுமதி காலாவதியான பிறகும் கூட, புலம்பெயர் மக்கள் 540 நாட்களுக்கு அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் பைடன் நிர்வாகத்தின் நடைமுறையை இந்த சமீபத்திய நடவடிக்கை மாற்றுகிறது.

ஆய்வுக்கு உட்படுத்தப்படும்
இந்த விதிக்கு வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன, இதில் TPS தொடர்பான வேலைவாய்ப்பு ஆவணங்களுக்கான சட்டத்தால் அல்லது ஃபெடரல் பதிவு அறிவிப்பு மூலம் வழங்கப்பட்ட நீட்டிப்புகள் அடங்கும்.
அத்துடன், புலம்பெயர் மக்களின் பின்னணி இனி அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்தப்படும். EAD ஆவணம் என்பது ஒரு தனிநபர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமெரிக்காவில் வேலை செய்ய அங்கீகரிக்கப்படுவதாகும்.

நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர்கள் EAD-க்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. H-1B, L-1B, O அல்லது P போன்ற அந்தஸ்தில் உள்ள நபர்களுக்கும் இந்த ஆவணம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |