மலாக்கா நீரிணையை குறிவைக்கும் அமெரிக்கா - இந்தியாவிற்கு ஏன் முக்கியம்?
உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ள நிலையில், பல்வேறு நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவும் ஹார்மோஸ் நீரிணை வழியாக வெளியேறும் கப்பல்களை தடுக்க போவதாக முற்றுகையிட்டுள்ளது.
உலகின் கவனம் ஹார்மோஸ் நீரிணையில் உள்ள நிலையில், மற்றொரு முக்கிய நீரிணையான மலாக்கா நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாடு செலுத்த தயாராகி வருவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மலாக்கா நீரிணை
ஏப்ரல் 13 ஆம் திகதி, அமெரிக்கா மற்றும் இந்தோனசியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புக் கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இது இந்தோனசியா வான்வெளியை அமெரிக்க ராணுவ விமானங்கள் பயன்படுத்துவதற்கான அணுகலை வழங்குகிறது.

இதன் மூலம் உலகின் முக்கிய வர்த்தக பாதையான மலாக்கா நீரிணையை(strait of malacca) கண்காணிக்கும் வாய்ப்பை பெறுகிறது அமெரிக்கா.
தற்போது, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளும் கூட்டாக இணைந்து இந்த நீரிணையை நிர்வகிக்கின்றன.

இந்த நீரிணையின் மிகக் குறுகிய பகுதியான பிலிப் கால்வாயில், சுமார் 3 கி.மீ அகலம் மட்டுமே உள்ளது. இது ஹார்மோஸ் நீரிணையை விட 9 மடங்கு குறுகலானது.
இது உலகளாவிய வர்த்தகத்தில் ஏறக்குறைய 25 சதவீதமும், சர்வதேச கடல்வழி எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 35 சதவீதமும் இந்த நீரிணை வழியாக நடைபெறுகிறது.
சீனா
சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பெறும் பிரதான நுழைவாயிலாக இந்த நீரிணை விளங்குகிறது.
சீனாவின் 80% எண்ணெய் இறக்குமதி இந்த பாதை வழியாகவே நடைபெறுகிறது.

சீனாவின் உற்பத்தித் தளத்துடன் தொடர்புடைய மூலப்பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட பொருட்களின் போக்குவரத்தும் இந்த பாதை வழியாகவே நடைபெறுகிறது.
எதிர்காலத்தில் சாத்தியமானதாக கருதப்படும் அமெரிக்கா - சீனா மோதலுக்கு இடையே, அமெரிக்காவின் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியா
குறிப்பாக, இந்தியாவின் வர்த்தகத்தில் சுமார் 55% இந்த பாதை வழியாகவே நடைபெறுவதாக கூறப்படுகிறது.
ஹார்மோஸ் நீரிணையை போல் எரிபொருள் விநியோகம் மட்டுமில்லாமல், மின்னணு சாதனங்கள், உற்பத்திப் பொருட்கள், தொழில்துறை பாகங்கள் என பரந்த வணிக பாதையாக இந்த நீரிணை உள்ளது.

அதேவேளையில், இதன் அருகாமையில் உள்ள கேம்பல் பேயில் அமைந்துள்ள இந்தியாவின் தென்கோடி ராணுவ விமான நிலையமான ஐஎன்எஸ் பாஸ் இந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும் அணுகலை இந்தியா பெறுகிறது.
போர்ட் பிளேயரிலிருந்து 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் மலாக்கா நீரிணையை அடைய முடியும்.
கிரேட் நிக்கோபார் திட்டம் மற்றும் கலாத்தியா வளைகுடாவில் முன்மொழியப்பட்ட முனையம், இந்தியாவிற்கு அந்த பகுதியில் கூடுதல் கடல்சார் வலிமையை வழங்குகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |