ரஷ்யா கைப்பற்றிய உக்ரைன் பகுதிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பு
ரஷ்யா கைப்பற்றியுள்ள இரண்டு உக்ரைன் பகுதிகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உக்ரைன் நாட்டின் எல்லை பகுதியில் இருக்கும் இரண்டு பிரிவினைவாத பிராந்தியங்களான டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) ஆகியவற்றுக்குச் சுதந்திரம் அளித்துள்ளார்.
இதன் மூலம் உக்ரைன் நாட்டின் இரு பகுதிகளை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
புடின் அறிவிப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான ஜோ பைடன், ரஷ்யா கைப்பற்றியுள்ள டொனெட்ஸ்க் (Donetsk) மற்றும் லுகான்ஸ்க் (Lugansk) பகுதிகள் மீது நிதியியல் தடை விதித்துள்ளார்.
அமெரிக்க வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகள் மீது விதிக்கப்பட்டு உள்ள நிதியியல் தடை மூலம், அமெரிக்க மக்கள் இவ்விரு பகுதிகளில் அமெரிக்க மக்கள்/நிறுவனத்தால் முதலீடு, வர்த்தகம், நிதியுதவி செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்ய இராணுவம் உக்ரைன் நாட்டிற்குள் தொடர்ந்து நுழைந்தால் அமெரிக்காவைத் தொடர்ந்து மற்ற மேற்கத்திய நாடுகளும் அடுத்தடுத்துப் பொருளாதாரத் தடை விதிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அறிவிப்பால் மும்பை பங்குச்சந்தை உட்பட ஆசிய சந்தை மொத்தமும் சரிவை சந்தித்துள்ளது.
தற்போது அமெரிக்கா விதித்துள்ள நிதியியல் தடை டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளுக்கு மட்டுமே. ரஷ்யா மீது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.