10 நிமிடங்களாக... வடகொரியாவுக்கு முதன்முறையாக ஏவுகணையால் பதிலடி கொடுத்த அமெரிக்கா
வட கொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியாவும் அமெரிக்காவும் எட்டு ஏவுகணைகளை ஏவியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியா ஞாயிற்றுக்கிழமை குறுகிய தூர பாலிஸ்டிக் ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவியதை அடுத்தே அமெரிக்காவும் தென் கொரியாவும் பதிலடி கொடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சம்பவமானது, வடகொரியா அத்துமீறினால் பதிலடிக்கு தயார் எனவும் தாக்குதல் தொடுக்க தங்களால் முடியும் என்பதை அந்த நாட்டுக்கு உணர்த்துவதற்காகவே முன்னெடுக்கப்பட்டது என அதிகாரிகள் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மாதம் புதிதாக ஜனாதிபதி பொறுப்புக்கு வந்த தென் கொரியாவின் Yoon Suk-yeol வடகொரியா தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.
மட்டுமின்றி, சியோலில் மே மாதம் நடைபெற்ற உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் கூட்டு இராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வடகொரியா வீசிய எட்டு ஏவுகணைகளுக்கு பதிலடியாக, தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் ராணுவங்கள், உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு தொடங்கி சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் எட்டு ஏவுகணைகளை ஏவியுள்ளது.
ஆனால், வடகொரியா தரப்பில் இதுவரை எந்த கருத்தும் இதுதொடர்பில் தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை ராணுவ பயிற்சியை மேற்கொண்டன.
கொரோனா பரவலால் பல வாரங்களாக கடுமையாக போராடி வரும் வடகொரியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ பயிற்சி அறிவிப்பை கிண்டலடித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.