கோல்டன் கேட் பாலத்தில் இருந்து குதித்த இந்திய அமெரிக்க சிறுவன்: தற்கொலை முயற்சி என பொலிஸார் தகவல்
அமெரிக்காவில் புகழ்பெற்ற கோல்டன் கேட் பாலத்தில் இருந்து 16 வயது இந்திய அமெரிக்க சிறுவன் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அமெரிக்க சிறுவன் தற்கொலை
அமெரிக்காவின் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பாலத்தில் இருந்து 16 வயது இந்திய அமெரிக்க சிறுவன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மாலை 4:58 மணியளவில் பாலத்தில் இருந்து ஒருவர் குதிப்பதை கண்ட கடலோரக் காவல் படையினர், தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
San Francisco Golden Gate Bridge(wikimedia)
இருப்பினும் சிறுவனை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் சைக்கிள், போன், பை ஆகியவை கோல்டன் கேட் பாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அந்த பகுதியின் சமூகத் தலைவர் அஜய் ஜெயின் பூடோரியா பிடிஐயிடம் தெரிவித்த தகவலில், கோல்டன் பிரிட்ஜில் இருந்து இந்திய அமெரிக்கர் ஒருவர் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நான்காவது சம்பவம் இதுவாகும் என தெரிவித்துள்ளார்.
தடுப்பு நடவடிக்கை
கட்டிடக்கலை அதிசயமாக விளங்கிய புகழ்பெற்ற கோல்டன் கேட் பாலம் 1937ம் ஆண்டு திறக்கப்பட்டது.
பாலம் திறக்கப்பட்டதில் இருந்து இதில் 2,000 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், கடந்த ஆண்டு மட்டும் 25 பேர் இந்த பாலத்தில் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் என்றும் இலாப நோக்கற்ற அமைப்பான பிரிட்ஜ் ரயில் அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது.
Photo for representational purpose(iStock)
புகழ்பெற்ற கோல்டன் கேட் பாலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், 1.7 மைல் நீளமுள்ள பாலத்தின் இருபுறமும், 20 அடி அகலத்தில் இரும்பு வலையை உருவாக்கும் பணியை மாநில அரசு தொடங்கியது.
2018ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஜனவரி 2022 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் கால அட்டவணையில் தாமதமாக இயங்குகிறது. இதன் கட்டுமானச் செலவும், 137.26 டாலர் மில்லியனில் இருந்து கிட்டத்தட்ட‚386.64 டாலர் மில்லியனாக உயர்ந்துள்ளது.