சொன்னதை செய்த ட்ரம்ப்... ரஷ்ய பொருளாதாரத்திற்கு அளித்த பெரும் நெருக்கடி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் திட்டமிட்டிருந்த சந்திப்பை ரத்து செய்த ட்ரம்ப் நிர்வாகம், தற்போது இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளது.
முதல் நடவடிக்கை
ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil ஆகியவை மீதே ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது. ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்புக்கு வந்த பிறகு ரஷ்யாவிற்கு எதிரான முதல் நடவடிக்கை இதுவென்றே கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான போருக்கு நிதியளிக்கும் எண்ணெய் விற்பனையிலிருந்து வரும் முக்கிய வருவாயைக் குறைப்பதே இலக்காகக் கொள்ளப்பட்டது. ரஷ்யாவிற்கு எதிரான இந்த நடவடிக்கையானது,
சமாதானம் விரும்பும் உக்ரைனுக்கு எதிராக விளாடிமிர் புடினின் அதிகபட்ச கோரிக்கைகள் மீது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு வளர்ந்து வரும் விரக்தியின் வெளிப்பாடு என்றே கூறுகின்றனர்.
தொடர் தாக்குதலை நிறுத்தி உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது என்றே கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சியை ஆதரிக்க, தேவைப்பட்டால் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க கருவூல நிர்வாகம் தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய நெருக்கடி
Rosneft மற்றும் Lukoil மீது கடந்த வாரம் பிரித்தானிய நிர்வாகம் தடைகளை விதித்திருந்தது. ரஷ்ய அரசாங்க நிறுவனமான Rosneft மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. ஆனால் தனியார் நிறுவனமான Lukoil மீது நடவடிக்கை எடுக்க மறுத்தது.
குறித்த நிறுவனத்தில் இருந்தே ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றனர். முன்னதாக ஓவல் அலுவலகத்தில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் உடனான சந்திப்பில், விளாடிமிர் புடினை இரண்டாவது முறையாக சந்திக்க முடிவு செய்ததை கைவிடுவதாக உறுதி செய்திருந்தார்.
நேர விரயம் என குறிப்பிட்ட ட்ரம்ப், எதிர்காலத்தில் சந்திப்பு நடக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார். புதன்கிழமை விதிக்கப்பட்ட தடைகளானது, வெளிநாடுகளில் ரஷ்ய எண்ணெய் விற்பனையிலிருந்து வருவாயைக் குறைப்பதற்கான மிகப்பெரிய நெருக்கடி என்றே கூறப்படுகிறது.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் ட்ரம்ப் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |